கட்டுரைகள்

தமிழ் ஆசிரியர்களுக்கு சிங்கள மொழியில் போதனை.

தமிழ் மொழி ஆசிரியர்களுக்கு சிங்கள மொழியில் பயிற்சிகள் வழங்கப்படும் கல்விக்கோட்டம் எங்கேயிருக்கிறது?
சமயப்பாடத்துக்கு ஆசிரியர்கள் இல்லாத பாடசாலை எங்கேயிருக்கிறது?
ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக சிங்கள ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ள பாடசாலை எது?
இந்தக்கேள்விகளுக்கான பதில்களைத் தேடும்போது குருநாகல் நகரத்தில் இருந்து 12 கிலோமீற்றரில் உள்ள மாவத்தகம கோட்டக்கல்விப் பகுதியிலேயே தமிழ் ஆசிரியர்களுக்கு சிங்களத்தில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
சமய பாடத்துக்கு ஆசிரியர் இல்லாத பாடசாலை எனும்போது “முவன்கந்த”; சரஸ்வதி தமிழ் வித்தியாலயம் என்று பதில் சொல்லலாம்.
மாவத்தகம தேர்தல் தொகுதியில் 4800 தமிழ் வாக்காளர்கள் உள்ளனர்.
சரஸ்வதி தமிழ் வித்தியாலயத்துக்கு முவன்கந்த பெருந்தோட்டம், பிட்டியகந்த மொரத்தன்ன, கொக்கோவத்த, நொட்டிங்ஹில் ஆகிய பெருந்தோட்டங்களில்; இருந்தும் மாவத்தக நகரில் இருந்தும் மாணவர்கள் கல்வி கற்பதற்காக வருகின்றனர்.
ஆரம்பத்தில் சரஸ்வதி தமிழ் வித்தியாலயம், தோட்டப் பாடசாலையாக இருந்து பின்னர் மாலை நேரப் பாடசாலையாக மாற்றம் பெற்றது.
1953இல், இந்தப்பாடசாலையை அரசாங்கம் பொறுப்பேற்றது
234 பிள்ளைகள் இங்கு படிக்கின்றனர்.
மாவத்தம பெருந்தோட்டங்களைச் சுற்றிவர சிங்கள கிராமங்கள் இருக்கின்றபோதும் தமிழ் கலாசாரம் இங்கு இன்னும் வாழ்வதாக சரஸ்வதி பாடசாலையின் அதிபர் கூறுகிறார்.
ஏனைய பகுதிகளைப்போன்று சிங்களக் கலாசாரத்தின் தாக்கம் இல்லை
கலப்புத் திருமணங்கள் அதிகமாக இடம்பெறுகின்றன.
சிங்கள மக்களும் பெருந்தோட்டங்களில் வசிக்கின்றனர்.
எனவே தமிழ். சிங்கள குரோத மனப்பான்மை இந்தப்பகுதிகளில் இல்லை.
சரஸ்வதி பாடசாலையில் 1960களில் கல்விப்பொதுத்தராதர சாதாரண தரம் ஆரம்பிக்கப்பட்டது.
2013இல் உயர்தரக் கலைப்பிரிவு ஆரம்பிக்கப்பட்டு பாடங்கள் போதிக்கப்படுகின்றன.
எனினும் உயர்தரத்துக்கும் சாதாரணத்தரத்துக்கும் ஆசிரியர் வெற்றிடங்கள் அதிகமாக உள்ளன.
விஞ்ஞானம் மற்றும் கணிதம் பாட ஆசிரியர்களுக்கு வெற்றிடங்கள் உள்ளன.
ஆங்கில ஆசிரியர்களாக 6 சிங்கள ஆசிரியைகள் பணியாற்றுகின்றனர்.
உயர்வகுப்புக்களை விட ஆரம்பக்கல்வி வகுப்புக்களுக்கு இந்த ஆசிரியைகள் பேசுகின்ற சிங்கள மொழி புரியாததன் காரணமாக, மாணவ மாணவிகள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகின்றனர்.
தமது பாடசாலையில் 13 ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் உள்ளதாகப் பாடசாலை அதிபர் ஜீவரட்ணம் கேதீஸ்வரன் கூறுகிறார்.
ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைகளில் 80 வீதமான மாணவர்கள், 70க்கும் அதிகமான புள்ளிகளைப் பெறுகின்றனர்.
உயர்வகுப்புக்களுக்கு வருகின்றபோது எழுத வாசிக்க தெரியாத பிள்ளைகளுக்கு 4ஆம் 5ஆம் ஆம் வகுப்புக்களுக்கு தனியாத விசேட திட்டம் ஒன்றும் 7, 8 ,9ஆம் வகுப்புக்களுக்கு தனியான திட்டம் ஒன்றும் செயற்படுத்தப்படுகிறது.
தமிழ் ஆசிரியர்கள் இவர்களுக்குக் கற்பிக்கின்றனர்
சாதாரணத்தரத்தைப் பொறுத்தவரை 56வீதமான பிள்ளைகள் சித்திபெறுகின்றனர்.
உயர்தரத்தில் 100 வீதமான சித்தி பெறப்படுகிறது.
2015இல் பல்கலைக்கழகத்துக்கு மாணவி ஒருவர் தெரிவானபோதும் வீட்டின் பொருளாதார நிலைக் காரணமாக அவர் அங்கு செல்லவில்லை.
விளையாட்டில் கோட்டமட்டத்தில் 42 பாடசாலைகளின் மத்தியில் ஐந்தாம் இடத்தி;ல் இந்தப்பாடசாலை தரப்படுத்தப்பட்டுள்ளது.
கல்வியைப் பொறுத்தவரையில் கோட்டத்தில் 16 பாடசாலைகளுக்கு மத்தியில் நான்காம் இடம் இந்தப்பாடசாலைக்குக் கிடைத்துள்ளது.
கோட்டத்தில் உள்ள 6 தமிழ்ப்பாடசாலைகள் மத்தியில் முதல் இடத்தில் தமது பாடசாலை உள்ளதாக அதிபர் தெரிவிக்கின்றார்.
மாணவர்களின் பெற்றோர் பாடசாலையின் வளர்ச்சியில் அதிக அக்கறை செலுத்துகின்றனர்.
கலந்துரையாடல்களின்போது 90 வீதமான பெற்றோர் அதில் சமுகமளிக்கின்றனர்.
2017 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட 10 வருடங்கள் ஒரே இடத்தில் சேவையாற்றியவர்களை இடமாற்றம் செய்தபோது இந்தப் பாடசாலையின் 10 ஆசிரியர்கள் ஒரே தடவையில் இடமாற்றம் பெற்றுச்சென்றனர்.
எனினும் அவர்களுக்காக பதில் ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை.
குறிப்பாக இந்தப் பகுதியில் இருந்து காலி போன்ற இடங்களுக்கு நியமிக்கப்பட்டிருந்தவர்கள் மீண்டும் தமது சொந்தப் பிரதேசங்களுக்கு அனுப்பப்படவில்லை.
இதன்காரணமாக 2017ஆம் சுயமாக வந்து கற்பிக்கக் கூடியவர்களை கொண்டே பாடத்திட்டங்கள் பூர்த்தி செய்யப்பட்டன.
குறிப்பாக மாவத்தக கல்விக் காரியாலயத்தில் தமிழ்ப்பாடசாலைகளுக்கு வளங்களை முறையாக ஒதுக்கும் அளவுக்கு தமிழ் அதிகாரிகள் நியமிக்கப்படவில்லை.
இருக்கின்ற அதிகாரிகளுக்கும் அதிகாரங்கள் இல்லை
தற்போதைய நிலையில் பாடசாலைக்கு உடனடியாக மைதானம் ஒன்றும் அவசியமாகிறது.
மண்டபம் ஒன்றும் இரண்டு வகுப்புக்களும் அவசியமாக உள்ளன
இந்தநிலையில் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக யோசனை ஒன்றை முவன்கந்த சரஸ்வதி தமிழ் வித்தியாலயத்தின் அதிபர் முன்வைக்கிறார்.
தமது பகுதிகளில் இருந்து கல்வியியல் கல்லூரிகளுக்குத் தெரிவாகியுள்ள ஆசிரியர் பயிலுநர்கள், பயிற்றப்பட்ட பின்னர்,  தமது பிரதேசத்துக்கே அனுப்பப்படவேண்டும்.
இதன்போதே தமது பாடசாலையின் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பிக் கல்வி வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச்செல்லமுடியும் என்பது பாடசாலை அதிபரின் யோசனையாக முன்வைக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க