அரசாங்கத்தின் ஜனநாயக விரோத செயற்பாட்டைக் கண்டித்து பதவியை துறந்த சம்பந்தனா? இன்று பதவி மோகத்திற்கு அடிமையாகியுள்ளார் என்கின்றபோது வேதனையாகவுள்ளது என தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலளார் நாயகம் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
தாம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவ்வாறு தெரிவித்துள்ளார்,
அமைச்சர்கள் மற்றும் ஆளுநர்களுக்கு ஏற்பட்ட விரும்பத்தகாத செயற்பாடுகளுக்கும், மற்றும் தங்கள் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களுக்கு நாட்டில் ஏற்பட்டுள்ள அசௌகரியங்களுக்கும் அரசாங்கத்தை இடித்துரைக்கும் நோக்கத்தில் ஒட்டு மொத்தமாக இராஜினாமா செய்த முஸ்லிம் தலைமைகளின் செயற்பாடு, சரி தவறுகளுக்கு அப்பால், பாராட்டத்தக்கதாகும்.
ஆனால் இதன் விளைவு எதிர் காலத்தில் மிகவும் பாரதூரமாக அமையும் என்பதால் இனியாவது சிந்தித்து செயற்பட வேண்டும்.
சிறுபான்மை இனங்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் ஒரு சில மததீவிரவாத கும்பலுக்கு இது ஒரு பாடமாகவும் அமைந்துள்ளது.
2004ம் ஆண்டு விடுதலைப் புலிகளின் முழு ஒத்துழைப்புடன் கள்ளவாக்குகள் மூலம் பாராளுமன்றம் சென்று பதவி சுகங்களை அனுபவித்து அதன் தொடர்ச்சியாக இன்று வi பாராளுமன்ற சுகங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் முஸ்லிம் தலைமைகளின் துணிச்சலைக் கண்டு வெட்கித்தலைகுனிய வேண்டும்.
ஜனாதிபதியும், பிரதமமந்திரியும் முட்டிமோதிக் கொண்டு, ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதற்காக வழமைக்கு மாறாக அளவிற்கு அதிகமாக சலுகைகளையும், தேவைக்கு அதிகமான பணத்தையும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமைச்சர்களுக்கும் கொடுத்ததன் விளைவே இன்று நாடு இந்த நிலைமைக்கு போய்விட்டது.
புத்த குருமார்கள் தாங்கள், தங்கள் மதம் சார்ந்த மக்களுக்கு தாங்கள் யார் என்று காட்டிவிட்டார்கள்.
இஸ்லாமிய தலைமைகளும் தங்கள் மதம் சார்ந்த மக்களுக்கு, தாங்கள் யார் என்று காட்டிவிட்டார்கள்.
ஆனால் தமிழ்த் தலைமைகள் என்னசெய்யப் போகின்றார்கள்?.
இந்த நிலைமை வந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர்கள் தந்தை செல்வா, அமரர் அமிர்தலிங்கம், அமரர் சிவசிதம்பரம் போன்றவர்கள் வலியுறுத்தினார்கள்,
அன்றுதொட்டு இன்றுவரை நானும், இந்தநாட்டில் உள்ள அனைத்து இன, மத மக்களும் நிம்மதியாகவும், சந்தோசமாகவும் வாழ என்னாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டேன்.
அதற்கு எனக்கு கிடைத்த பரிசு துரோகி பட்டம். இனியாவது நான் சொன்னதை அல்லது சொல்வதை கேட்பார்களா? என வீ. ஆனந்தசங்கரி கேள்வி எழுப்பியுள்ளார்
கருத்து தெரிவிக்க