இந்தியா

கட்டணம் செலுத்தாத 80 வயது முதியவர்.. கட்டிலில் கட்டி போட்ட துயரம்.

போபால்: மத்திய பிரதேசத்தில் ஷாஜாபூரில் உள்ள 80 வயது முதியவர், சிகிச்சைக்கான கட்டணத்தை செலுத்த இயலாததால் அவரை மருத்துவமனை நிர்வாகம் கட்டிலில் கட்டி வைத்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஷாஜாபூரைச் சேர்ந்தவர் 80 வயது முதியவர். இவருக்கு உடல்நலம் சரியில்லாததால் அவரை சிகிச்சைக்கா ஷாஜாபூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் ஏற்கெனவே 5000 ரூபாய் பணம் செலுத்தியுள்ள நிலையில் மேலும் ரூ 11 ஆயிரத்தை இறுதி கட்டணமாக செலுத்த வேண்டும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. கையில் பணம் இல்லாததால் அவரது குடும்பத்தினரால் அத்தகைய பணத்தை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

இதையடுத்து அவரை மருத்துவமனை நிர்வாகம் வீட்டுக்கு அனுப்ப மறுத்து கட்டிலில் கட்டி போட்டு வைத்துள்ளதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டுகிறார்கள். இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. முதல்வர் சிவ்ராஜின் காதுகளை எட்டியது. இதையடுத்து அவர் தாமாக முன்வந்து மருத்துவமனை நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. மருத்துவமனையில் விசாரணை நடத்த போலீஸார் சென்றுள்ளனர். இந்த நிலையில் இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் கூறுகையில் அந்த முதியவருக்கு எல்க்ட்ரோலைட் ஏற்றத் தாழ்வு இருக்கிறது. இதனால் அவருக்கு அவ்வப்போது வலிப்பு நோய் ஏற்படுகிறது.

அந்த சமயத்தில் அவர் தன்னையே காயப்படுத்திக் கொள்கிறார். இதை தடுக்கவே அவரை கட்டிலில் கட்டி போட்டுள்ளோம். மனிதாபிமான அடிப்படையில் அவர் செலுத்த வேண்டிய கட்டணத்தையும் நாங்கள் தள்ளுபடி செய்துவிட்டோம் என பெயர் வெளியிட விரும்பாத மருத்துவர் தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க