நடந்து முடிந்த வெறுக்கத் தக்க சம்பவங்களால் நாடே சோபை இழந்து நிற்கும்போது ஒரு சில காழ்ப்புணர்ச்சி உள்ள இழிநிலை அரசியல்வாதிகளே இன்னுமின்னும் இனத்துவேஷத்தையும் வெறுப்புணர்வையும் ஏற்படுத்திக் கொண்டிருப்பதாக சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அலிஸாஹிர் மௌலானா ஆதங்கம் வெளியிட்டார்.
ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் பிரதேச செயலாளர் வெள்ளக்குட்டி யூசுப் தலைமையில் ஏறாவூர் நகர பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
கூட்டுத் தாபன, திணைக்கள அதிகாரிகள், உள்ளுராட்சி மன்றப் பிரதிநிதிகள், அரசாங்க அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்ட இந்நிகழ்வில் பிரதேச அவிபிருத்தித் திட்டங்கள், மக்களின் பாதுகாப்பும் இயல்புவாழ்க்கையும் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் பற்றித் தெளிவுபடுத்தப்பட்டன.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய மாவட்ட இணைப்புக்குழு இணைத்தலைவரும் இராஜாங்க அமைச்சருமான அலிஸாஹிர் மௌலானா, நாட்டில் சமீபத்தில் இடம்பெற்ற அசம்பாவித சம்பவங்களைத் தொடர்ந்து நாடு செயலிழந்து தற்போதைக்கு மீண்டும் உயிர் மூச்செடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் ஒரு சில கீழ்த்தரமான மனோநிலை கொண்ட காழ்ப்புணர்ச்சி அரசியல்வாதிகளின் செயற்பாடுகள் எரிந்து கொண்டிருக்கும் தீயில் மேலும் எண்ணெய் வார்ப்பதாய் அமைந்திருக்கிறது.
இது வெறுக்கத்தக்கதும் கண்டிக்கத்தக்கதுமான செயலாகும்.
கடந்த 30 வருட கால ஆயத வன்முறைகளின் துயரம் எப்படிப்பட்டது என்பதை நாம் அனுபவித்து அதில் பல்வேறு வகையான இழப்புக்களையும் சந்தித்து மீளாத்துயரிலிருந்து மீண்டெழுந்து கொண்டிருக்கின்ற நிலையிலே சமீபத்தில் மீண்டுமொரு துயரம் நம்மை சோகத்தில் ஆழ்த்தி விட்டுச் சென்றிருக்கின்றது.
இந்நிலைமயிலிருந்து விடுபட நல்லுள்ளம் கொண்ட அனைவரும் இனமத பேதமின்றி நடுநிலை நின்று நிலைமகளைச் சீர் செய்து கொண்டிருக்கின்றார்கள். அதனை நாம் பெருமையுடன் வரவேற்கின்றோம்.
அதேவேளை, இந்த ஒட்டு மொத்த நாட்டுக்குமே அழிவைத் தரக்கூடிய நிலையில் சில இனவாத அரசியல்வாதிகளும், வெளிநாட்டு சக்திகளும் நடந்த சம்பவங்களை இனவெறுப்புக்குரியதாக மாற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.
எனவே, சமூக சகவாழ்வையும் இன சௌஜன்யத்தையும் இந்த நாட்டு நலனையும் விரும்பும் எவரும் இந்த விடயத்தில் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இனங்களைப் பிரித்து நாட்டை அழிவுக்கு இட்டுச் செல்லும் நடவடிக்கைகளுக்கு ஒருபோதும் இடமளிக்கக் கூடாது. மனித உரிமைகளை மணி மகுடம்போல் காத்து மக்களுக்கிடையில் இன மத பேதமின்றி சகவாழ்வை புத்துயிர் பெறச் செய்ய வேண்டும்.
ஒரு சிறு கும்பலின் செயலால் இப்பொழுது இந்த நாட்டின் ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயமும் பல இன்னல்களுக்கு முகங்கொடுக்க வேண்டியேற்பட்டுள்ளது.
எனவே, இந்த நிலைமையை மாற்றியமைக்க வேண்டும். இனவாதிகளுக்கோ, மதவாதிகளுக்கோ இனிமேல் இந்த நாட்டில் குழப்பங்களைத் தோற்றுவிக்க முடியாது என்ற நிலையை உறுதிப்படுத்த வேண்டும்.” என்றார்.
கருத்து தெரிவிக்க