அநுராதபுரவில் மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா உள்ளிட்ட 31 பேர் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட வழக்கில் இரண்டாவது எதிரிக்கு ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
2008 ஆம் ஆண்டு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் ஒன்றில் மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா உள்ளிட்ட 31 பேர் கொல்லப்பட்டனர்.
இது தொடர்பான வழக்கில், முதல் எதிரியான சண்முகநாதன் சுதர்சனுக்கு 2014, செப்ரெம்பர் 5ஆம் திகதி, அநுராதபுர மேல்நீதிமன்றத்தினால், 20 ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இதையடுத்து, இந்த வழக்கு அனுராதபுர சிறப்பு மேல் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
இந்த நிலையில், நேற்று இந்த வழக்கின் இரண்டாவது எதிரியான அமீர் உமருக்கு ஆயுள்தண்டனை வழக்கி அனுராதபுர சிறப்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அத்துடன் விடுதலைப் புலிகளால் அவருக்கு வழங்கப்பட்ட பெறுமதி மிக்க உடமைகள் அனைத்தையும் பறிமுதல் செய்து, அருங்காட்சியகத்தில் ஒப்படைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மோதல் – ஒருவர் பலி
கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் நேற்றிரவு இரண்டு குழுக்களுக்கிடையில் நடைபெற்ற மோதலில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். அத்துடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.
வெஹெரகொடெல்ல, ஒருகொடபுர பகுதியைச் சேர்ந்த 46 வயதான நபரொருவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். மோதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
இடமாற்றம்
வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, உடன் அமுலுக்குவரும் வகையில் காலிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் ஆணைக்குழுவின் பணிப்புரையின் பிரகாரமே இதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது என பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், பொலிஸ் அத்தியட்சகருமான ருவான் குணசேகர தெரிவித்தார்.
மைத்திரிமீது மஹிந்த நம்பிக்கை
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது பதவிக்காலத்தை நீடிப்பதற்கு முற்படுவார் என தான் நினைக்கவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஒரு பதவிக்காலத்துக்கு மட்டுமே பணியாற்றுவேன் என்று கூறியிருந்த ஜனாதிபதி அவ்வாறு செய்யமாட்டார் என்றும் ஜனாதிபதித் தேர்தலைப் பிற்போட முனையமாட்டார் என்றும் மஹிந்த நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
32 பேருக்கு பிணை
கம்பஹா, மினுவாங்கொடையில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக அரங்கேற்றப்பட்ட வன்முறைகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட 32 பேர் பிணையில் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இன்று மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோதே, பிணை கிடைத்துள்ளது.
மீன் வகைகள் கொள்வனவு
உயர்த்தரத்திலான மீன் வகைகளை மீனவர்களிடம் இருந்து கொள்வனவு செய்து பொதுமக்களுக்கு வழங்க, கடற்றொழில் கூட்டுத்தாபனம் புதிய வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளது.
இராஜாங்க அமைச்சர் திலீப் வெதஆராச்சி மற்றும் கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் தலைவர் உள்ளிட்டோரின் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இதற்கான தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க