உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்முக்கிய செய்திகள்

அமைச்சுப் பதவியை துறக்கிறார் ரிஷாட்?

” சுயாதீன விசாரணைக்கு இடமளித்து அமைச்சுப் பதவியை தற்காலிகமாகவேனும் இராஜினாமா செய்யுங்கள்.” – என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீனிடம், ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

21/4 தாக்குதலை மையப்படுத்தி அமைச்சர் ரிஷாட்டுக்கு எதிராக கூட்டு எதிரணியால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை நாடாளுமன்ற ஒழுங்குப் புத்தகத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

பிரேரணையை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளும் திகதியை நிர்ணயிப்பதற்காக சபாநாயகர் கருஜயசூரிய எதிர்வரும் செவ்வாய்க்கிழமை, நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்களையும், பிரதிநிதிகளையும் சந்திக்கவுள்ளார்.

அத்துடன், ரிஷாட்டுக்கு எதிரான பிரேரணையானது தெற்கு அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அது வெற்றி பெற்றாலும், தோல்வியடைந்தாலும் தமது அணிக்கு வெற்றியென மஹிந்த அணி அறிவித்துள்ளது.

இந்நிலையிலேயே ஐ.தே.கவின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களால் மேற்படி கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அமைச்சருக்கு கடிதமொன்றையும் அனுப்புவதற்கு உத்தேசித்துள்ளனர்.

பிரேரணைக்கு இடமளித்து அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தாது, விசாரணைகளுக்கு இடமளித்து – அவை முடிவடையும்வரை பதவி துறப்பதே சிறந்த அரசியல் முடிவாக அமையும் எனவும் சுட்டிக்காட்டவுள்ளனர்.

எனவே, தமது கோரிக்கையை ஏற்று அமைச்சர் ரிஷாட் விரைவில் பதவி துறப்பார் என எதிர்பார்ப்பதாகவும் அவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க