குஜராத் கலவர வழக்கில் பிரதமர் நரேந்திர மோடி, விடுவிக்கப்பட்டமைக்கு எதிரான மனு மீதான வழக்கு விசாரணையை எதிர்வரும் 26 ஆம் திகதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
குறித்த கலவரம் தொடர்பான வழக்கின் மீதான மனு, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர் தலைமையிலான அமர்வுக்கு முன்பு நேற்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது.
இதன்போது, சிறப்பு புலனாய்வு குழு தரப்பில் முன்னிலையான சட்டத்தரணி முகுல் ரோகத்கி, மனு விசாரணைக்கு ஏற்புடையது அல்லவென வாதிட்டார்.
மேலும், இவ்வழக்கில் தன்னையும் இணைத்துக்கொள்ள சமூக சேவகி தீஸ்தா செதல்வாட், தாக்கல் செய்துள்ள மனு எவ்விதத்திலும் உகந்ததொன்று இல்லை என்பதால் அதனை தள்ளுபடி செய்ய வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.
இதனால் நீதிபதிகள், “இரு மனுக்கள் மீதும் விசாரணைகளை மேற்கொள்ள கால அவகாசம் தேவைப்படுகின்றது. ஆகவே எதிர்வரும் 26ஆம் திகதிக்கு வழக்கு ஒத்தி வைக்கப்படுகிறது” என உத்தரவிட்டுள்ளனர்.
குஜராத் மாநிலம், கோத்ரா பகுதியில் கடந்த 2002ஆம் ஆண்டு ரயில் எரிப்பு சம்பவமொன்று நடைபெற்று பெரிய கலவரமொன்று ஏற்பட்டது.
குறித்த கலவரத்தில் காங்கிரஸ் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இசான் ஜாப்ரி உயிரிழந்தார்
இதன்போது கலவரம் தொடர்பாக விசாரணை நடத்திய சிறப்பு புலானாய்வு குழு, அப்போதைய குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி உள்ளிட்டோருக்கு கலவரத்தில் தொடர்பு ஏதும் இல்லையென கூறி விடுவித்தது.
ஆகையால், இதனை எதிர்த்து இசான் ஜாப்ரியின் மனைவி ஜக்கியா ஜாப்ரி, குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அப்போது அவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடந்த ஆண்டு ஒக்டோபர் 5ஆம் திகதி ஒத்திவைத்தது.
இதனால் உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இதன் மீதான விசாரணை கடந்த 13ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டு 19ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதாக நீதிமன்றம் அறிவித்திருந்த நிலையில் நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க