இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

நோர்வூட் ஆடை தொழிற்சாலையில் வேலை நிறுத்தப்பட்ட தொழிலாளர்களுக்கு விரைவில் தீர்வு

நோர்வூட் ஆடை தொழிற்சாலையில் எவ்வித முன்னறிவித்தலுமின்றி ஆயிரத்துக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் தொழில் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான கொடுப்பனவுகள் இதுவரையும் கொடுக்கப்படவில்லை. இது சம்பந்தமாக அங்கு தொழில் இழந்த சில நபர்கள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதித் தலைவர் கணபதி கனகராஜ் அவர்களிடம் முறைப்பாடு பதிவு செய்தனர் இது சம்பந்தமாக அமைச்சர் ஜீவன் தொண்டமானுடன் கலந்துரையாடப்பட்டது. அதன் அடிப்படையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதி தலைவர் கணபதி கனகராஜ் மற்றும் நோர்வூட் பிரதேச சபையின் முன்னாள் தலைவரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அம்பகமுவ பிரதேச அரசியல் துறை அமைப்பாளருமான ரவி குழந்தைவேல் ஆகியோரும்  ஹட்டன் தொழில் திணைக்களத்தில் முறைப்பாட்டினை முன்வைத்துள்ளனர்.

 

இதன் அடிப்படையில் இன்று நோர்வூட் ஆடை தொழிற்சாலையின் முகாமையாளார்களை அழைத்து ஹட்டன் தொழில் திணைக்களத்தின் ஆணையாளர் திரு மனோஜ் பண்டார அவர்களினால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது.

 

இவ் விசாரணையில் ஆடைத் தொழிற்சாலையில் தொழிலை இழந்தவர்கள் சார்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அம்பகமுவ பிரதேச அரசியல் துறை அமைப்பாளராகிய ரவி குழந்தைவேல் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தொழிற்சங்க பணிப்பாளர் லோகதாஸ் அவர்களும் பங்கு பற்றியிருந்தனர்.

 

இந்த விசாரணையின் போது எந்தவித சாதகமான பதிலும் கிடைக்காததால் நிறுவனத்தின் நிர்வாக பணிப்பாளர்களை அழைத்து பேசுவதற்கு முடிவு செய்யப்பட்டது, இதற்கமைய வரும் ஜனவரி 22ஆம் திததி மீண்டும் விசாரணைகள் ஆரம்பிக்கப்படும்வரும்.

 

வரும் 22 ஆம் திகதி சாதகமான பதில் கிடைக்காவிட்டால் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தொழில் இழந்தவர்கள் சார்பாக தொழில் திணைக்களத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படும் என்பதை இன்று தொழிலாணையாளரிடம் அறிவித்துள்ளனர். இந்த விசாரணையின் போது நோர்வூட் ஆடை தொழிற்சாலையில் வேலை இழந்த 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க