கட்டுரைகள்

கோவை ஞானி காலத்தில் கரைந்தார்…

கோவை ஞானி (86) நேற்று (22.07.20) காலை 11.15 மணி அளவில் காலமானர் என்ற செய்தி இலக்கிய உலகை மிகுந்த துயரத்துள் ஆழ்த்தியுள்ளது.

அவரது இலக்கிய உலகமும், அரசியல் உலகமும் பரந்து பட்டது. சத்தி எஸ்.என். நாகராசன், எஸ்.வி.இராஜதுரை, ஞானி ஆகிய மூவரும் ஓர் ஆயுத எழுத்துப் போல அன்றைய காலகட்டத்தில் இயங்கி வந்தனர். மார்க்சியத்தை மார்க்சிய –
இலெனினிய வழியில் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றனர். அதன் வெளிப்பாடாகப் ” புதிய தலைமுறை ” எனும் பத்திரிகை வெளிவந்தது. காவல்துறையின் நெருக்கடியும் தொடர்ந்தது.

ஞானியோடு இணைந்து பணியாற்றிய பசுமையான நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். கொரோனா கால கட்டத்தில் இறப்பது மிகவும் சாபக்கேடானது நமக்கு விருப்பமானவர்களின் இறுதி நிகழ்வில் கூடக் கலந்து கொள்ள முடியாத குற்ற உணர்வை அப்பொழுது நாங்கள் இருவரும் பகிர்ந்து கொண்டோம்.

தனது கொள்கையை ஞானி அவர்கள் எப்பொழுதும் ஒளித்து மறைத்துப் பேசாதவராகவே திகழ்ந்தார். மார்க்சியமே தனக்கு வழிகாட்டி என இறுதி வரை உறுதியாக ஊன்றி நின்றார்.

மார்க்சியத்தில் சர்வதேச அளவில் புதிது புதிதாகக் கிளைத்துவரும் போக்குகளை அடையாளம் கண்டு அதைத் தமிழுக்குக் கடத்துவதில் கருத்தாக இருந்தார். தமிழில் பட்டம் பெற்றவராக இருந்தாலும், அரிதின் முயன்று மார்க்சியம் குறித்து ஆங்கிலத்தில் மிக அண்மையில் வெளிவந்த நூல்களை எல்லாம் தேடித் தேடிக் கற்று வந்தார். மேலும் அது குறித்து அவரைச் சுற்றியிருந்த அறிவர் குழுவினரிடையே மிகத் தீவிரமாக விவாதித்தார்.

ஒரே சமயத்தில் கற்றுக் கொடுப்பவராகவும், கற்றுக் கொள்பவராகவும் விளங்கினார் அவர்.

1990 கால கட்டத்தில் அவரது பார்வை சர்க்கரை நோயால் முற்றிலும் பறிபோன பிறகும், அவரது உதவியாளர்கள் மூலம் படிப்பைத் தொடர்ந்தார். எவ்வளவு சோதனைகள் வந்தாலும், படிப்பதை மட்டும் அவர் நிறுத்தவே இல்லை.

தொடக்கத்தில் நேருவின் மீதும், இந்தியத்தின் மீதும் அவருக்கு மிகுந்த ஈர்ப்பு இருந்தது. பிறகு அது சிறிது சிறிதாகப் பரிணாமம் அடைந்து, இந்திய மயக்கத்திலிருந்து விலகி, தமிழ் – தமிழ்நாடு – தமிழக மக்கள் எனக் குவிமையம் கொண்டது.

பழந்தமிழ் இலக்கியங்களை மார்க்சியக் கண்ணோட்டத்தில் ஆய்வு செய்து, புதிய திறப்புகளை உருவாக்கினார்.

அவரது தமிழ்த் தேசியம், சாதி மறுப்பு – மத நீக்கம் – சூழலியல் கரிசனம் என்பதாக விரிந்திருந்தது. தமிழிலக்கியங்களில் ஆழ்ந்த ஞானம் மிக்கவராக இருந்ததால், தமிழ்த் தேசியம் குறித்துத் துல்லியமான பங்களிப்பை அவரால் வழங்க முடிந்தது.

பழமையும், புதுமையும் சரிவிகிதத்தில் கலந்த கச்சாப் பொருளாக அவரது உலகம் மிளிர்ந்தது. பார்வை பறிபோன பிறகும், அன்றன்று தமிழில் வெளிவந்த நவீனக் கவிதை – நாவல் – சிறுகதை – இலக்கியத் திறனாய்வு போன்றவற்றோடு இடையறாத் தொடர்பில் இருந்தார். அவை குறித்து எதிர்வினை ஆற்றியதோடு, புதிதாக எழுத வருபவர்களை ஊக்கப்படுத்திக் கொண்டே இருந்தார்.

கீழைக்காற்று, பரிமாணம், நிகழ், தமிழ்நேயம் என அவரது இதழியல் பயணம் மிக நீண்டது. இலக்கியம் குறித்தும், மார்க்சியம் குறித்தும், தமிழ்த் தேசியம் குறித்தும் தனது சிந்தனைகளைத் தொகுத்து அப்பத்திரிகைகள் மூலம் வெளியிட்டுக் கொண்டே இருந்தார்.

மார்க்ஸ், பெரியார், அம்பேத்கர் சிந்தனைகளின் இணைப்பையும், அதன் வழி முகிழ்க்கும் இயக்கங்களும்தான் இன்றைய உடனடித் தேவை என்பதைத் திரும்பத் திரும்ப அவர் வலியுறுத்திக் கொண்டே இருந்தார்.

ஒரு சில கூறுகளில் அவரிடமிருந்து நாம் வேறுபடலாம். ஆனால், நீரடித்து நீர் விலகாது என்பது போல், அவரது வசீகரமான தமிழும், புதுமைச் சிந்தனைகளும் என்றென்றும் நம்மை ஈர்த்துக் கொண்டே இருக்கும்.

அவர் எழுதி குவித்த எண்ணற்ற நூல்களின் வழி அவர் என்றென்றும் நம் நினைவுகளில் நிலையாக வாழ்ந்து கொண்டிருப்பார்.

கருத்து தெரிவிக்க