ஜோதிடம்

குரு- சுக்கிரன்

குரு, சுக்கிரன் ஒன்றாயிருப்பதே தவறு என்பதை பார்க்கும் முன் இரண்டாமிட குரு பலன்களை பற்றி முதலில் பார்ப்போம்.

ஏனெனில் இரண்டாமிட குருவை பற்றி விவரிக்கும்போதே உங்களுக்கு குருவின் நன்மை முழுதாய் புரிந்து விடும். பிறகு எப்படி சுக்கிரன் குருவோடு
பொருந்தும் என்று நீங்களே கேட்கும் அளவிற்கு விஷ யம் எளிதில் விளங்கிவிடும்.
இரண்டாமிடம் நமது பேச்சு, வீடு, தனம் அல்லது செல்வம், படிப்பு, முகம், கண் அனைத்தையுமே தெரிவிக்கக்கூடியது. நாம் ஈட்டும் பணம் எப்படிப்பட்டதாய்
இருக்கும் என்பதை பார்க்க அல்லது அளவிட இலாபஸ்தானமான 11 ம் இடத்தை எப்படி பார்க்கிறோமோ அதுபோலவே இரண்டாமிடத்தையும் நாம் பார்க்க
வேண்டும்.
ஒருவர் உண்மை பேசுபவரா அல்லது பொய் பேசுபவரா என்று கண்டறியும் இடமும் இதே இரண்டாம் இடத்தான்.

குரு என்ற ஒழுக்கசீலனே வாக்குஸ்தானமான இரண்டில் நின்றால் அவர் உண்மையின் உறைவிடமாகல்லவா இருப்பார்! அது மட்டுமின்றி பெரியவர்களை
மதிக்கும் குணமும், குழந்தைகளோடு பேசும் போது நானும் குழந்தையாகவே மாறும் தன்மை படைத்தவராக இருப்பார்கள். படிப்பின் அருமை, பெருமை
உணர்ந்தவராகவும், ஆசிரியர்களின் ஆசிர்வாதம் பெற்றவர்களாகவும் இருப்பர். பேசும் வார்த்தைகளை நிதானத்தோடு பேசும் இயல்புடையவர்களாக
விளங்குவார்கள். பெரும் பதவிகளில் இருக்கும் முக்கியஸ்தர்களுக்கு ஆலோசனை வழங்கும் பொறுப்பில் இருக்கவும் வாய்ப்புண்டு.

பொதுவாக இரண்டில் குருவிருக்க பிறந்தவர்கள் ஆசாரமான குடும்பத்தில் இருக்க வாய்ப்புண்டு. கல்வி மற்றும் வேள்விகளில் சிறந்து
விளங்குபவர்களாகவும் ஒரு சிலர் மரவேலை மற்றும் விவசாயத்தில் வருமானம் உள்ளவர்களாகவும் இருப்பார்கள்.

ஒரு சிலருக்கு ஆலயம் கட்டும் வாய்ப்பும் கிட்டலாம். கண்கள் தீட்சண்யத்துடனும், பிரகாசமான முக அமைப்போடுகாணப்படுவர். இன்னும் சிலர்
கோயிலில் வேலை செய்யும் அமைப்பு உள்ளவராயும் இருப்பர். மேலும் வேதமறிந்தவராயும் இருப்பார். இவருக்கு எதிரிகளே இல்லாமல் இருக்கவும்
வாய்ப்புண்டு. அது மட்டுமின்றி வம்பு வழக்குகள் இவரை தீண்டாது என்றே சொல்லலாம்!
இதெல்லாம் லக்னத்துக்கு இரண்டில் குரு இருந்தால் ஏற்படும் பலன்கள்!

ஜென்மராசிக்கு இரண்டில் குரு வருமாயின் குடும்பத்தில் சந்தோஷம், நிம்மதி கூடும், இரண்டில் வந்த குரு நிறைவான பொருள் வரவை உண்டாக்குவார்.
தொழிலிடத்தை குரு தன் விஷேசமான 9-ம் பார்வையால் பார்ப்பதால் வேலையிடத்தில் மதிப்பு மரியாதையை கூட்டுவார். சிலருக்கு பதவி உயர்வும்
உண்டாகும். எதிரிகளே பயந்து விலகுவார்கள். வழக்கு வியாக்கியங்களில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் உள்ள குழந்தைகள் உயர்வு பெறுவார்கள் என்று
நற்பலன்களை அடுக்கிக்கொண்டே செல்வார் இரண்டாமிட குரு!

அப்படியெனில் இரண்டாமிட குரு என்றாலே நல்லதை மட்டுமே அனைத்து லக்ன/ ராசிகளுக்கும் தருவாரா என்றால் ‘இல்லை’ என்றே சொல்ல
வேண்டியிருக்கிறது! காரணம் என்னவென்று கேட்டால் ஒத்தை வார்த்தையில் ‘சுக்கிரன்’ என்று பதில் சொல்லி விடலாம்.

குருவின் சத்ரு! புராணகாலந் தொட்டே தீரா பகையில் உள்ள விஷயம் குருவிற்கு சுக்கிரனும்!

சுக்கிரனிற்கு குருவும்! சுக்கிரன் வாழ்வியல் அகங்களின் தலைவன், பெண் சுகத்திற்கு அவனே அதிபதி!
குருவோ கடவுளை உணர்த்தும் வேதங்களின் ருசியை உணர்த்துபவர்.

சுக்கிரனோ இன்பங்களை வாரி இறைக்கும் இல்லற வேட்கையை உண்டாக்குபவர். குரு, படைப்பின் மூலமான பரம்பொருளை புரிய வைப்பவர். சுக்கினோ
பாலியல் கவர்ச்சியில் கரைய வைப்பவர். குரு ஆன்மா யாரென விசாரிக்க தூண்டுபவர்! சுக்கினோ உடல் சுகத்தை மட்டுமே பெரிது படுத்தும்.
உணவு, உடை, காதல், அழகு இவைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பவர்!

குரு என்பவர் உணர்வுகளை கடந்து உண்மைக்குள் செல்ல வைப்பவர்.! சுக்கிரன் என்பவர் உணர்ச்சி குவியல், சந்தோஷம், கோபம், ஆச்சரியம், பொறாமை
என நவரசங்களுக்கும் வர்ணமடிப்பவர்! பிறகெப்படி இருவரும் ஒருவருக்கொருவர் பொருந்துவார்கள்?!

அதனால்தான் ஜோதிடம் ஏழாமிடத்திற்கு ஜென்ம குருவின் ஏழாம் பார்வையோ அல்லது ஏழாமிடத்தில் குரு இருப்பதையோ வன்மையாக மறுக்கிறது!
காரணம் ஏழாமிடம் என்பது ஒருவரது இல்லற துணையையும், அவரது காமத்தின் தன்மையையும் தெரிவிக்ககூடியது. அதனாலேயே சிற்றின்பமான
இல்லற சுகத்தைக் கொடுக்கும் சுக்கிரனின் இடமாக ஏழாமிடம் பார்க்கப்படுகிறது!

வேதமுறைப்பவன் அவ்விடத்தை கண்டால் இல்லற வேட்கைக்கு எப்படி தீர்வு கிடைக்கும் என்று ஜோதிடம் கேள்வியெழுப்புகிறது! ஆனால் அதே ஜோதிடம்
குருவின் விசேஷ பார்வைகளான 5-ம், 9-ம் ஏழாமிடத்தில் விழுவது சிறப்பென்றும் சொல்கிறது. காரணம் தெய்வ பக்தி உள்ள இல்லற துணை மற்றும்
சிற்றின்பத்தைகூட அளவாக வைத்துக்கொள்ளும் ஒழுக்கம் குரு பார்வையில் கிடைக்குமே, அதனால்தான்!

ஆக சுபர் ஆகட்டும் அசுபர் ஆகட்டும் அவை அவைகளுக்குரிய இடத்தில் இருப்பதே சிறப்பு என ஜோதிடம் இயம்புகிறது. இதை பற்றி எழுதுகையில்

‘பரமசிவன் கழுத்தில் உள்ள பாம்பு கேட்டது!
‘குருடா சௌக்கியமா? யாரும் இருக்கும் இடத்தில் இருந்து விட்டால் எல்லாம் சௌக்கியமே!
கருடன் சொன்னது அதில் அர்த்தம் உள்ளது!
என்ற கண்ணதாசனின் வரிகளே ஞாபகத்துக்கு வருகின்றன.
அதனால் சௌக்கியத்தை கெடுக்கும் சுக்கிரன்-குரு கூட்டு பற்றி இன்னும் விரிவாய் அடுத்த இதழில் பார்ப்போம்.

கருத்து தெரிவிக்க