முல்லைத்தீவு ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் அவர்களிடம் நேற்று (25.09.2019) கொழும்பில் பயங்கரவாத தடுப்பு பிரிவு 3 மணி நேரத்துக்கு மேல் விசாரணை மேற்கொண்டுள்ளது
இந்நிலையில் ஸ்ரீலங்கா பொலிஸ் திணைக்களத்தின் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் தனது ஊடக பணிக்கு இடையூறை ஏற்படுத்தியுள்ளதாக ஐ.பி.சி தமிழின் முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஊடகவியலாளர்கள் மீதான அடக்கு முறைகள் இனிவரும் காலங்களில் இடம்பெறக் கூடாது என்றும் ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் பகிரங்க கோரிக்கையொன்றையும் முன்வைத்திருக்கின்றார்.
ஸ்ரீலங்காவில் ஜனநாயகத்தையும், ஊடக சுதந்திரத்தை முழுமையாக உறுதிப்படுத்தியிருப்பதாக தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் பெருமிதம் வெளியிட்டு வருகின்ற நிலையில், விசாரணை ஒன்றுக்காக TID என்று அழைக்கப்படும் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் சண்முகம் தவசீலனுக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.
முல்லைத்தீவு – பனிக்கன்குளம் – மாங்குளம் என்ற முகவரியில் அமைந்துள்ள ஊடகவியலாளரின் வீட்டிற்கு நேரடியாக சென்று TID யினரின் கொழும்பிலுள்ள தலைமை அலுவலகத்தில் முன்னிலையாகுமாறு இம்மாதம் கடந்த 18 ஆம் திகதி அழைப்புக் கடிதம் கையளிக்கப்பட்டிருந்தது.
இந்த கடிதத்திற்கு அமைய செப்டெமர் 25 ஆம் திகதியான நேற்றைய தினம் புதன்கிழமை காலை 10.00 மணிக்கு கொழும்பு 01 இல் அமைந்துள்ள TID தலைமை அலுவலகத்திற்கு தனது சட்டத்தரணியுடன் ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் சமூகமளித்திருந்தார்.
இதன் போது முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் கடற்கரையில் கப்பலடி பகுதியில் வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் மே மாதம் 12 ஆம் திகதி இடம் பெற்றிருந்த தமிழின படுகொலை நினைவு வாரத்தின் ஆரம்ப நிகழ்வு தொடர்பில் வினவப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வு தொடர்பாக களத்தில் செய்தி சேகரிக்கச் சென்றவர் என்ற ரீதியில் இந்த நிகழ்வு தொடர்பாக வினவிய பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் நிகழ்வில் சிங்கள மொழியில் எம்.கே.சிவாஜிலிங்கத்தினால் ஊடகங்களுக்கு வழங்கப்பட்ட கருத்து தொடர்பாகவும் வினவியுள்ளனர்.
தமிழ் மற்றும் சிங்கள அதிகாரிகள் இருவர் சுமார் மூன்று மணித்தியாலங்கள் தன்னிடம் விசாரணை மேற்கொண்டதாகவும் ஊடகவியலாளர் தவசீலன் தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க