முல்லைத்தீவு – செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத் தீர்த்தக்கேணிக்கு அருகில் பௌத்த பிக்கு ஒருவரின் உடலை எரித்த சம்பவமானது சிறிலங்கா நீதித்துறை மீது தமிழ் மக்களுக்கு இருந்த சொற்ப நம்பிக்கையும் இல்லாமல் செய்து விட்டது என தமிழ்த் தேசியப் பேரவையின் பங்காளிக் கட்சியான தமிழர் சம உரிமை இயக்கம் தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவமானது சைவத்தமிழ் மக்களின் மனங்களில் ஆறாத வடுவை ஏற்படுத்தியுள்ளது எனவும் மேற்படி இயக்கம் தெரிவித்துள்ளது.
தமிழர் சம உரிமை இயக்கத்தின் செயலாளரும் வலி.வடக்கு பிரதேச சபை உறுப்பினருமான தா.நிகேதன் விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்படி விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
நீதிமன்ற உத்தரவு அவமதிக்கப்பட்டமை, சட்டத்தரணி கே.சுகாஸ் தாக்கப்பட்டமை, சிங்களப் பிக்குகள் மற்றும் காடையர்கள் அடாவடித்தனம் புரிந்தமை போன்ற செயல்களை தமிழர் சம உரிமை இயக்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சிங்களப் பேரினவாதம் கடந்த காலங்களில் தமிழ் மக்கள் மீது வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டபோதெல்லாம் சிறிலங்கா நீதித்துறை வாய்மூடி மௌனம் காத்தது. இதனால் நீதித்துறை மீது தமிழ் மக்கள் நம்பிக்கை இழந்திருந்தனர்.
எனினும், அண்மைக் காலமாக சிறிலங்கா ஜனாதிபதி நாடாளுமன்ற ஆட்சியில் தலையிட்டு முன்னெடுத்த நடவடிக்கைக்கு எதிராக நீதிமன்று வழங்கிய தீர்ப்பு உள்ளிட்ட சில முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்புக்களின் மூலம் தமிழ் மக்களுக்கு நீதித்துறை மீது நம்பிக்கை பிறந்திருந்தது.
ஆனால், இன்று முல்லத்தீவு – செம்மலையில் சைவத்தமிழ் மக்களின் புண்ணிய தலமான நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில், அந்த ஆலயத் தீர்த்தக் கேணிக்கு அருகில், நீதிமன்ற உத்தரவை மீறி பௌத்த பிக்குவின் உடல் எரியூட்டப்பட்டிருக்கின்றது.
சட்டத்தையும் ஒழுங்கையும் அமுல்படுத்தவேண்டிய பொலிஸார், அதிலும் உயர் பொலிஸ் அதிகாரிகள் இச்செயற்பாட்டை கைகட்டி வேடிக்கை பார்த்திருக்கின்றனர்.
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு எதிர்காலத்தில் சிறிலங்கா நீதித்துறை மூலம் தீர்ப்பு ஒன்று வழங்கப்படுமாயின், பௌத்த சிங்கள மேலாண்மைவாதம் அதை எப்படி ஏற்றுக்கொள்ளும் என்ற கேள்வி இங்கு எழுந்திருக்கின்றது. இதனாலேயே தமிழர்களின் இனப்பிரச்சினை விடயத்தில் பன்னாடுகளின் தலையீட்டைக் கோரி நிற்கின்றோம்.
எதிர்காலத்தில் தமிழ் மக்களின் பூர்வீக இடங்களில் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுவதைத் தடுத்து நிறுத்தவேண்டும் என அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கின்றோம். மேற்படி சம்பவத்தில் நீதித்துறையை அவமதித்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் எனவும் வலியுறுத்துகின்றோம். – எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க