உள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

சமரா, சமாதானமா? நாளை முக்கியத்துவமிக்க சந்திப்பு!

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில்  ஐக்கிய தேசியக் கட்சிக்குள் முரண்பாடுகள் தீவிரமடைந்துள்ள நிலையில் அக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவும், பிரதி  தலைவர் சஜித் பிரேமதாசவும் நாளை (07) தனியாகச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளமையானது அனைவரினதும் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஐதேகவின் ஜனாதிபதி வேட்பாளராக தானே போட்டியிடுவேன் என்று பிரகடனம் செய்து கொண்ட சஜித் பிரேமதாச, பதுளை, மாத்தளை, குருநாகல ஆகிய இடங்களில் பாரிய பேரணிகளை நடத்தியிருந்தார்.

இந்தநிலையில் தானே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக ரணில் விக்ரமசிங்க நேற்று கட்சியின் மூத்த தலைவர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதனால் இரண்டு தரப்பு ஆதரவாளர்களும் மோதிக் கொள்ளும் நிலை உருவாகியுள்ளது.

இந்தநிலையில், சஜித் பிரேமதாசவுடன் தனியாகச் சந்தித்துப் பேசி முடிவு காண வேண்டும் என்று ரணில் விக்ரமசிங்கவிடம் கட்சியின் உயர்மட்டத் தலைவர்கள் கோரியிருந்தனர்.

இதனை ஏற்றுக் கொண்ட ரணில் விக்ரமசிங்க, நாளை சஜித் பிரேமதாசவை தனியாகச் சந்தித்து, அதிபர் வேட்பாளர் குறித்து பேசி முடிவு செய்யவுள்ளார்.

நாளை நடக்கவுள்ள இந்தச் சந்திப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன், கட்சியின் செயற்குழு மற்றும் நாடாளுமன்றக் குழு கூட்டங்களை ஒரே நாளில் நடத்துவதற்கான திகதியும் இதன்போது நிர்ணயிக்கப்படும் என சிறிகொத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த பேச்சின்போது முக்கிய சில விடயங்கள் தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்படாத பட்சத்தில் சஜித் அணி மாற்று நடவடிக்கையில் இறங்கக்கூடும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

 

கருத்து தெரிவிக்க