எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கிடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து, எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தல் ஒக்ரோபர் 11ஆம் நாள் நடத்தப்படும் என காலி மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி நேற்று அரசிதழ் அறிவிப்பை வெளியிட்டார்.
இதுகுறித்து அதிருப்தி வெளியிட்டுள்ள தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களில் ஒருவரான பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல், தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூட்டம் நடத்தப்படாமல் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் இதில் பக்கசார்பற்ற நகர்வாக தெரியவில்லை என்று கூறியிருக்கிறார்.
“உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பின்னர், தேர்தல் ஆணைக்குழுவின் கூட்டம் எதுவும் நடக்கவில்லை. ஆணைக்குழு அத்தகைய முடிவை எப்படி, எப்போது, எங்கே எடுத்தது?
நீதிமன்ற தீர்ப்புக்கு முன்பிருந்தே நான் யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலையில் இருந்தேன். தேர்தல் ஆணைக்குழுவின் முறையான கூட்டத்திற்கு மூன்று உறுப்பினர்களின் கோரம் தேவை.
இந்த முடிவு ஆணைக்குழுவின் முடிவு அல்ல என்று ஆணைக்குழுவின் துணைத் தலைவருக்கும் காலி மாவட்டச தெரிவத்தாட்சி அதிகாரிக்கும் தெரியப்படுத்தியுள்ளேன்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தச் சர்ச்சை குறித்து கருத்து வெளியிட்டுள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய, உச்சநீதிமன்ற உத்தரவின் படி, தேர்தல் நாள் குறித்து முடிவெடுக்க வேண்டியது, மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி தான் என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நீதிமன்றம் தெரிவத்தாட்சி அதிகாரிக்கே உத்தரவிட்டது. அவர் தனது தெரிவு குறித்து தேர்தல் ஆணைக்குழுவின் கருத்தை கோரினார்.
நானும், ஆணைக்குழுவின் உறுப்பினரான நளின் அபேசேகரவும், இணங்கினோம். அதில் இரண்டுக்கு ஒன்று என்ற பெரும்பான்மை இருந்தது. எனவே அந்த முடிவு எடுக்கப்பட்டது” என்று கூறினார்.
கருத்து தெரிவிக்க