பென் ஸ்டோக்கின் அதிரடியான ஆட்டத்தினால் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஏஷஸ் டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றுள்ளது.
இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள டிம் பெய்ன் தலைமையிலான அவுஸ்திரேலிய அணி ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணியுடன் ஐந்து போட்டிகள் கொண்ட ஏஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இதில் பேர்மிங்கமில் இடம்பெற்ற முதல் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 251 ஓட்டத்தினால் அபார வெற்றிபெற்றது. அதன் பின்னர் லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் இடம்பெற்ற இரண்டாவது போட்டி சமநிலையில் நிறைவடைந்தது.
இந் நிலையில் கடந்த 22 ஆம் திகதி லீட்ஸ் மைதானத்தில் ஆரம்பமான மூன்றாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 52.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 179 ஓட்டங்களை பெற்றது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 27.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 67 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
112 ஓட்டங்கள் முன்னிலையுடன் 2 ஆவது இன்னிங்ஸை தொடங்கிய அவுஸ்திரேலிய அணி அணி 2 ஆவது நாள் முடிவில் 6 விக்கெட்டுக்கு 171 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
இந்த நிலையில் 3 ஆவது நாளான நேற்று தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய 2 ஆவது இன்னிங்சில் 246 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.
இங்கிலாந்து அணிக்கு 359 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
ஒரு கட்டத்தில் இங்கிலாந்து அணி 286 ஓட்டத்துக்கு 9 விக்கெட்டுக்களை பறிகொடுத்து தடுமாறியது.
எனினும் ஆடுகளத்தில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பென் ஸ்டோக்ஸ் இறுதியாக களமிறங்கிய ஜேக் லீச்சுடன் இணைந்து வெற்றிக்காக போராடினார்.
ஆறு ஓட்டங்களையும், நான்கு ஓட்டங்களையும் விளாசித் தள்ளிய அவர் 121.1 ஓவரில் டெஸ்ட் அரங்கில் தனது 8 ஆவது சதத்தை பூர்த்தி செய்தார். அது மாத்திரமன்றி அந்த ஓவரில் மாத்திரம் இங்கிலாந்து அணி 19 ஓட்டங்களை பெற்றது.
இந்நிலையில் இங்கிலாந்தின் வெற்றிக்கு ஒரு விக்கெட் மாத்திரம் கையிருப்பில் இருக்க 18 ஓட்டம் தேவைப்பட்டது. இந்த சந்தர்ப்பத்தில் பென் ஸ்டோக்ஸ் 125.4 ஆவது ஓவரில் மேலும் ஒரு நான்கு ஓட்டத்தை விளாசி இங்கிலாந்து அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.
கருத்து தெரிவிக்க