உள்நாட்டு செய்திகள்புதியவை

‘அமெரிக்கவாதியா சீனவாதியா? மக்களே தீர்மானிக்க வேண்டும்’

அமெரிக்கா மற்றும் சீனா நாடுகளுடன் சர்வதேச உடன்படிக்கைகளை செய்துகொண்டு நாட்டினை சீர்குலைத்து வரும் நிலையில் அடுத்து நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலின் பிரதான இரண்டு வேட்பாளர்களின் யார் அமெரிக்கவாதி யார் சீனவாதி என்பதை மக்கள் தெரிந்து தீர்மானம் எடுக்க வேண்டும் என விஜயதாச ராஜபக்ஷ சபையில் தெரிவித்தார்.

அரசாங்கம் சர்வதேச நாடுகளுடன் செய்து கொள்ளவுள்ள ஒப்பந்தங்களை சபைக்கு சமர்ப்பிக்க கோரி எதிர்க்கட்சி உறுப்பினர் தினேஷ் குணவர்தன கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதன் போது இந்தியா போன்ற நாடுகளை பகைத்துக்கொண்டு முப்பது ஆண்டுகள் நாம் பட்ட கஷ்டங்களை மீண்டும் உருவாக்கிவிட வேண்டுமா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

எதிர்பாராத வகையில் குண்டுகள் வெடிக்கப்பட்டு மக்களே பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே துறைமுகங்களை கைப்பற்றி அதன் மூலம் நாட்டினை ஆக்கிரமிக்கும் செயற்பாடுகளுக்கு இடமளிக்கக்கூடாது. இன்னும் சிறிது காலத்தில் ஜனாதிபதி தேர்தல் ஒன்று இடம்பெறவுள்ளது.

இதில் யாரை ஜனாதிபதியாக்க வேண்டும் என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும். ஆனால் எவ்வாறான நாட்டினை உருவாக்க வேண்டும் என்பதை ஆட்சியாளர்கள் தீர்மானிக்க வேண்டும். இதில் பிரதான வேட்பாளர்களில் யார் அமெரிக்கவாதி யார் சீனவாதி, இவர்கள் இருவரின் யார் நாட்டுக்கு நல்லவர்கள் இவர்களால் நாட்டுக்கு என்ன நன்மைகள் ஏற்படப்போகின்றது என்பதை கருத்தில் கொண்டு மக்கள் தீர்மானம் எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க