மன்னார் நகரசபையின் சுத்திகரிப்பு பணியாளர்கள் , சாரதிகள் உட்பட மன்னார் நகரசபையின் கீழ் தொழில்புரியும் ஊழியர்கள் இன்று காலை 9 மணியளவில் மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக அடையாள கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
மன்னார் நகரசபையின் கீழ் சுத்திகரிப்பு பணியில் ஈடுபடும் 44 ஊழியர்களுக்கு கடந்த 2003 ஆம் ஆண்டு மன்னார் ஜீவபுரம் பகுதியில் முன்னாள் மன்னார் பிரதேச செயலாளரினால் வழங்கப்பட்ட காணிகளுக்கான வரைபடமும் வழங்கப்பட்ட நிலையில் 15 வருடங்கள் ஆகியும் இது வரை குறித்த துப்பரவு பணியாளர்களுக்கு குறித்த காணிகளுக்கான உறுதிபத்திரமோ அல்லது வீட்டுத்திட்டமோ அடிப்படை வசதிகளோ இதுவரை செய்யப்படவில்லை.
தாம் தொடர்ச்சியாக புறக்கணிக்கப்படுவதாக சுத்திகரிப்பு தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக உரிய அதிகாரிகளை சந்திக்க முற்படுகின்ற போதும் அவர்களை சந்திக்க முடியாமல் வெளியேற்றப்படுகின்றோம் என தொடர்ந்து தெரிவிக்கின்றனர்.
2003 ஆம் ஆண்டு காணிகள் வழங்கப்பட்ட 44 பேருக்கும் காணி உறுதி பத்திரங்களை உடன் வழங்க வேண்டும்.
அத்துடன் அளவீடு செய்து ஒதுக்கப்பட்ட காணிகளை பிறருக்கு வழங்குவதுடன் நிறுத்தப்படல் வேண்டும் , காணிக்கு புதிதாக விண்ணப்பித்துள்ள 15 சுத்திகரிப்பு தொழிலாளர்களுக்கும் காணிகள் உடன் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், காணி வழங்கப்பட்ட தொழிலாளர்களுக்கு வீட்டு திட்டம் மலசலகூடம் மின்சாரம் மற்றும் நீரிணைப்பு கிடைக்க உரிய நடவடிகை எடுக்க வேண்டும் போன்ற அடிப்படை கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு கோரியுள்ளனர்.
மேலும் குறித்த கோரிக்கைகள் அடங்கிய மகஜர்களும் இன்று வியாழக்கிழமை (1) மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம் பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திற்கு வருகை தந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் கையளிக்கப்பட்டது.
குறித்த பிரச்சினை தொடர்பாக உரிய அதிகாரிகள் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் பணிப்புரை விடுத்தார்.
கருத்து தெரிவிக்க