கட்டுரைகள்

ஜெனீவாவுக்கு விடப்படும் சவால்

2009ஆம் ஆண்டு போர் முடிவிற்கு வந்த காலத்தில் இருந்தே சர்ச்சைகளில் சிக்கி வந்த மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா மீண்டும் ஊடகங்களில் விவாதிக்கப்படும் ஒருவராக மாறியிருக்கிறார்.
இராணுவத்தின் கொமாண்டோ றெஜிமென்ட்டின் தளபதியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டு கடந்த ஐந்தாம் திகதி கணேமுல்லயில் உள்ள கொமாண்டோ றெஜிமென்ட் தலைமையகத்தில் அவர் தனது பதவியை ஏற்று கொண்டிருந்தார்.
ஏற்கனவே கஜபா றெஜிமென்ட்டின் தளபதியாகவும், இராணுவத்தின் தலைமை அதிகாரியாகவும் பதவியில் இருக்கும், மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு இப்போது, கொமாண்டோ றெஜிமென்ட்டின் தளபதி பதவியும் வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்தப் பதவியில் இருந்தவர் மேஜர் ஜெனரல் ரால்ப் நுகேரா. இறுதிக்கட்டப் போரிலும், அதற்கு முன்னர், 53ஆவது டிவிசனிலும் இருந்த அவர் முக்கியமான சண்டைகளில் பணியாற்றியவர்.
கடைசியாக கிளிநொச்சி படைத் தலைமையக தளபதியாகவும், கொமாண்டோ றெஜிமென்ட் தளபதியாகவும் இருந்த நிலையில் கடந்த நான்காம் திகதியுடன் ஓய்வு பெற்றார்.
அவரது இடத்துக்கே மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டிருக்கிறார். இவரது இந்த நியமனம், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மத்தியில் மீண்டும் விசனத்தை தோற்றுவித்திருக்கிறது.
ஏற்கனவே இவருக்கு இராணுவத் தலைமை அதிகாரியாக பதவி உயர்வளிக்கப்பட்டபோது சர்வதேச மனித உரிமை அமைப்புக்களுக்கும், ஐநாவுக்கும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.
காரணம் விடுதலைப் புலிகளுக்க எதிரான போரில் இடம்பெற்றிருந்த போர்க்குற்றங்களுடன் இவர் தொடர்புபட்டிருந்தார் என்ற பரவலான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வருகிறது.
இறுதிக்கட்ட போரில் போர்க்குற்றங்களை இழைத்ததாக குற்றம்சாட்டப்படும், இராணுவத்தின் 58ஆவது டிவிசனின், கட்டளை அதிகாரியாக இருந்தவர் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா.
போரின் முடிவில் 58ஆவது டிவிசனிடம் சரணடைந்த நூற்றுக்கணக்கான புலிகளின் தளபதிகள், பொறுப்பாளர்கள், அவர்களின் குடும்பத்தினர் காணாமல் ஆக்கப்பட்டதாகவும், நடேசன், புலித்தேவன், ரமேஸ் போன்ற புலிகளின் தளபதிகள் சரணடைந்த போது படுகொலை செய்யப்பட்டதாகவும், குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன.
மனித உரிமை அமைப்புக்களால் போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்படும் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிபான இராணுவத் தலைமை அதிகாரி பதவி வழங்கியபோதே கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியிருந்தன.
ஐநா மனித உரிமை ஆணையாளர் மிச்சேல் பச்லெட் அம்மையாரின் அறிக்கையில் கூட அது சுட்டிக்காட்டப்படிருந்தது, கடந்த மார்ச் 20ஆம் திகதி ஐநா மனித உரிமைகள் பேரவையில் நிகழ்த்திய உரையில், அவர்,
“ஒரு முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் என்னால் நிலைமாறுகால நீதி செயல்முறைகளின் ஒரு அங்கமாக பாதுகாப்பு சீர்திருத்தங்களின் முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்த முடியும்.
இந்த மறுசீரமைப்புகள் மனித உரிமைப் பதிவுகள் தொடர்பான சந்தேகங்கள் உள்ள அதிகாரிகளை நீக்குகின்ற வகையிலான ஆய்வு முறைகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.
அண்மையில் இலங்கை இராணுவத்தின் மூத்த பதவிக்கு சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமை சட்ட மீறல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டமையானது, ஒரு கவலையளிக்கும் நிலையாகும்” என்று கூறியிருந்தார்.
அந்தளவுக்கு மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவின் நியமனம் ஐநா மனித உரிமை ஆணையாளரின் கவனத்தை ஈர்த்திருந்தது.
அதற்குப் பின்னர் ஐநா மனித உரிமை ஆணையாளருடன் இலங்கை அரசாங்கத் தரப்பு பிரதிநிதிகள் குழு நடத்திய சந்திப்புத் தொடர்பாக அந்தக் குழுவில் இடம்பெற்றிருந்த வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் வெளியிட்ட கருத்துக்களை மறுதலித்து ஐநா மனித உரிமை ஆணையாளர் மிச்சேல் பச்லெட் அம்மையார் மார்ச் 27ஆம் திகதி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதிலும் கூட அவர் இந்த விவகாரத்துக்கு முக்கியத்துவம் அளித்திருந்தார். அந்த விடயம் பெரும்பாலும் எந்த ஊடகங்களிலும் வெளியாகவில்லை.
மோசமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்படும் இராணுவ அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட நியமனங்கள் தொடர்பான கரிசனைக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்ததுடன், மோசமான குற்றங்களை விசாரிக்க விசேட தீர்ப்பாயம் ஒன்றை அமைப்பதில் எந்த முன்னேற்றமும் எட்டப்படாதது குறித்தும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
ஐநா மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரை என்னவெனில் மோசமான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள இராணுவ அதிகாரிகளை இராணுவப் பணியில் இருந்து நீக்க வேண்டும், அதனை செய்வதற்கான மனித உரிமை ஆய்வுகளை முன்னெடுக்கக்கூடிய பாதுகாப்பு மறுசீரமைப்புகளை முன்னெடுக்க வேண்டும் என்பது தான்.
கடந்த மாதத்தின் பிற்பகுதியில் ஒன்றுக்கு இரண்டு தடவைகள் ஐநா மனித உரிகைள் ஆணையாளர் பச்லெட் அம்மையார், மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டதற்கு எதிராக கருத்துகளை வெளியிட்டிருந்த நிலையிலும் கூட அவருக்கு இராணுவத்தில் மீண்டும் ஓர் உயர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா வகிக்கின்ற இராணுவத் தலைமை அதிகாரி பதவி இராணுவத்திலேயே இரண்டாவது உயரதிகாரம் கொண்ட பதவியாகும்.
இலங்கை இராணுவத்தின் பெரிய படைப்பிரிவுகளில் ஒன்று தான், கஜபா றெஜிமென்ட். அதன் தளபதியாகவும் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா இருக்கிறார்.
ஆனால் கஜபா றெஜிமென்டுடன் ஒப்பிடுகையில் கொமாண்டோ ரெஜிமென்ட் அந்தளவு பெரிதில்லை. ஆயினும் அதற்கு மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளதற்கு பின்னால் ஒரு அரசியல் காரணம் இருக்கிறது, ஐநா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கைக்கான ஒரு பதிலடியாக இந்த நியமனத்தை குறிப்பிட்டு சொல்லலாம்.
மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் இந்த பதிலடி யுக்தியை முன்னர் பயன்படுத்தியிருந்தது.
2009ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வந்ததும், இறுதிப் போரில் முக்கிய பங்காற்றிய படைப்பிரிவுகளின் கட்டளை அதிகாரிகளுக்கு வெளிநாடுகளில் இராஜதந்திரப் பதவிகள் வழங்கப்பட்டன.
மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, ஐநாவுக்கான பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக நியமிக்கப்படார். மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் ஜேர்மனிக்கான துணைத் தூதுவராக நியமிக்கப்பட்டார்.
இது இறுதிக்கட்டப் போரில் அவர்கள் ஆற்றிய பணிகளை கௌரவிப்பதற்கான ஒரு நடவடிக்கை என்று மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் கூறியது. ஆனால், உண்மைக்காரணி அதுவல்ல.
போர் முடிந்தவுடனோயே மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் உள்ளிட்ட இராணுவ அதிகாரிகள் பலர் மீதும் போர்க்குற்றசாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
அவ்வாறான குற்றச்சாட்டுகளை முறியடிக்கவே அவர்களுக்கு வெளிநாடுகளில் இராஜதந்திர பதவிகள் வழங்கப்பட்டன.
அப்போதைய அரசாங்கத்தில் வெளிவிவகார அமைச்சராக இருந்த பேரசிரியர் ஜி.எல்.பீரிஸும், முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெருமவும், கடந்த மார்ச் 25ஆம் திகதி கொழும்பில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தியிருந்தனர்.
அதில் ஊடகவியலாளர் ஒருவர் போர் முடிந்து ஆறு ஆண்டுகளாக இராணுவத்தின் மீது சுமத்தப்பட்ட போர்க்குற்றசாட்டுகளை முறியடிக்க மஹிந்த ரஜபக்ஷ அரசாங்கம் என்ன செய்தது என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும பதிலளிக்கையில், “ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய, மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் போன்ற மூத்த அதிகாரிகளுக்கு இராஜதந்திரப் பதவிகள் வழங்கப்பட்டன” என்று கூறியிருந்தார்.
இதிலிருந்து போர்க்குற்றச்சாட்டுகளை முறியடிப்பதற்கான ஓர் ஆயுதமாகவே போரில் பங்கெடுத்த மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா போன்ற அதிகாரிகளுக்கு இராஜதந்திர பதவிகள் வழங்கப்பட்டிருக்கின்றன என்பது உறுதியாகிறது.
அது மாத்திரமின்றி, போர்க்குற்றசாட்டுகளை சுமத்திய ஐநா உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளுக்கும் நாடுகளுக்கும் நெருக்கடியை கொடுக்கவும் அவற்றுக்குச் சவால் விடுவதற்குமே மேஜர் ஜெனரல் சவேந்திர சிலவா போன்றவர்கள் இராஜதந்திரிகளாக்கப்பட்டனர்.
அவர்கள் அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகளின் தலைநகரங்களில் சுதந்திரமாக உலா வந்து இந்த குற்றச்சாட்டுகள் எல்லாம் வேலைக்கு ஆகாது என்று சவால் விட்டனர்.
அதுபோல தான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இப்போது நடந்து கொள்கிறாரோ என்று எண்ணத்தோன்றும் வகையில் இராணுவத்தில் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கான முக்கியத்துவம் அதிகரிக்கப்பட்டு வருகிறது.

கருத்து தெரிவிக்க