– தமிழகத்திலிருந்து குணா
பிதுர் தோஷம் உருவாக சனி ஏன் காரணமாக வேண்டுமென்றும்? தந்தை ஆகாத சனி தர்மம் பற்றியும் இந்த இதழில் பார்ப்போம்.
முதலில் ‘சனி தர்மம்’ பற்றி தெளிவாக தெரிந்து கொள்வோம். அப்படி தெளிவாக தெரிந்து கொண்டோமானால், அது ஏன் தந்தைக்கு ஆகாமல் போயிற்று என்பதும் நமக்கு எளிதில் விளங்கிவிடும்.
உலக நாடுகளில் உள்ள அரசுகளில் உயர்ந்த பதவிகளில் உள்ளவர்கள், தங்கள் குடும்பத்தார் செய்யும் குற்றங்களை கண்டும் காணாமல் இருப்பதும், அப்படியே அதன்பால் ஏற்படும் வழக்குகளில் சிக்கினாலும்கூட அரசின் சட்டவிதிகளையே மாற்றுவது, நீதிபதிகளை விலைபோக வைப்பது, நேர்மையாளர்களை இடம் மாற்றுவது, முடியாவிட்டால் அவர்களையே இல்லாமல் செய்வது போன்றவைகளே இப்போதைய நிலையாக உள்ளன. இது உலகத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் தினசரி செய்திகளாகவேகூட மாறிவிட்டது!
உலகில் இந்த அதர்ம போக்கே தற்போதைய கலியுக தர்மமாக விளங்குகிறது. இந்த கலியுக தர்மத்துக்கு நடுக்கத்தை ஏற்படுத்துவது ‘சனி தர்மம்’ மட்டும்தான்!
இதற்கு முன்பும்கூட அதாவது சேர, சோழ, பாண்டியர் காலத்திலும் வாழ்வியல் தர்மம், அதர்மத்தின் பக்கம் அடியோடு சாய்த்து விடாமல்தான் இருந்தது. இலங்கையின் எல்லாள பேரரசன், சோழ பேரரசின் மனுநிதி சோழன் என்று நீதிக்கு இலக்கணமான அரசர்கள் சுடர்விட்டு பிரகாசிக்கவே செய்தனர்.
இவர்களது காலங்களை பற்றியதல்ல நம்முடைய கட்டுரையின் நோக்கம். அவர்களது கருத்தைப் பற்றியதே!
எந்த உயிருமே நம் அரசாட்சியில் துன்பபடக்கூடாது என்பதே மனுநீதி சோழனின் தர்மம்! அதற்காகவே தன் அரண்மனைக்கு வெளியில் மணியொன்றை அமைத்து அதற்கு ஆராய்ச்சி மணி என்று பெயரிட்டான்!
தங்கள் வாழ்க்கையில் எவருக்கேனும் துன்பம் நிகழ்ந்தால் உடனே இங்கு வந்து இந்த ஆராய்ச்சி மணியை அடித்து முறையிடலாம்! நானே அரசவையை கூட்டி, பாதிக்கபட்டவரின் வழக்கை விசாரித்து நீதி வழங்குவேன்.! என்று அறிவிக்கவும் செய்தான் சோழன்! ஆனால் அந்த மணி அடிக்கப்பட்டதே இல்லை. ஒரு நாள் அந்த மணியும் சத்தமெழுப்பியது ஒரு தாய் பசுவினால்!
அதனது மொழி புரியா விட்டாலும் அதன் சோகம் உணர்ந்தான். விசாரிக்க உத்தரவிட்டான். அந்த தாய் பசுக்கு நடந்த சோகம் அடுத்த சில மணித்துளிகளில் சோழனுக்கு சொல்லவும் பட்டுவிட்டது!
அதாவது குழந்தை இல்லாமல் இருந்து ஏங்கி பல காலம் தவமாய் தமிருந்து பெற்ற பிள்ளையான சோழனின் மகன் ‘வீதி விடங்கன்’ வீதியில் இரதத்தில்வரும்போது ‘ சோழ இளவரசனை பார்க்க ஆங்காங்கே மக்கள் கூட்டம் முண்டியடித்தது! அதனால் கலவரப்பட்ட ஒரு கன்றுக்குட்டி நடுவீதியில் இளவரசனின் இரதத்துக்கு குறுக்காக வந்துவிட்டது. திடீரென குறுக்கேவந்ததால் இளவரசன் வீதி விடங்கனின் தேரின் சக்கரம் அதன்மீது ஏறி அந்த கன்றுக்குட்டி இறந்து போனது என்பதே விசாரிப்பின் விடை!
இதற்கு ‘ என்னென்ன தண்டனைகள் வழங்கலாம்’ என்று மந்திரிமார்களின் சார்பில் வலியுறுத்தப்பட்ட விஷயங்கள் எதுவும் சோழனை திருப்தி செய்யவில்லை! அதனால் தண்டனையை தானே தீர்மானித்தான். ‘வீதி விடங்கனின் விதியும் அதே தேர் சக்கரத்தினால் முடிக்கப்படவேண்டும்’ என்பதே அது! தண்டனை சரியானது என்றாலும் மந்திரிகளுக்கும் மக்களுக்கும் அதில் உடன்பபாடில்லை! அதனால் அந்த தண்டனையை நிறைவேற்ற எவரும் துணியவும் இல்லை! அதனால் சோழன் தானே தேரை ஓட்ட துணிந்தான். தந்தையின் தீர்ப்பை மகிழ்வோடு ஏற்ற மகன் ‘வீதி விடங்கன், வீதியில் படுத்தான். சோழனின் தேர் அவன்மீது ஏறி அவனது உயிரை பறித்தது.
உடனே சிவபெருமான் சோழனுக்கு காட்சியளிக்க மாண்ட வீதி விடங்கனும், கன்றுக்குட்டியும் உயிரோடு மீண்டெழுந்தார்கள் என்பதை சைவ சமயத்தின் முக்கிய நூலான பெரிய புராணம் சொல்கிறது. இதுபோல எல்லாள பேரரசன் வரலாற்றிலும் ஒரு நிகழ்வை நாம் பார்க்கிறோம்.
எல்லா உயிரும் ஒன்றே..பசுவாக இருப்பினும் அதன் தாய்மைக்கு நடந்த சோகத்துக்கும் மதிப்பளித்த சோழனின் மாண்பை என்னவென்று சொல்வது!
அந்த சம்பவம் இப்போது நிகழ்ந்தால..! மகன் வீதி விடங்கன் மந்திரிகளின் ஆதரவோடு ஆட்சிக் குதிரையை அலங்கரித்திருப்பான். தந்தை மனு நீதிசோழன் சிறைவாசத்தில் சிதைக்கப் பட்டிருப்பான்!
பசுக்கெல்லாம் நீதியா? என்ற குரல்கள் நிதி வலிமையால் ஓங்கி ஒலிக்கப்பட்டு, தர்மத்தின் குரல்வளை நெறிக்கப்பட்டு உயிரை விட்டிருக்கும்!
ஆக இந்த கலியுக தர்மத்துக்கு ‘சனிதர்மமே’ சரியானது!
நம்முடன் கூடவே இருந்து நாம் செய்யும் தவறுகளுக்கு எல்லாம் சாட்சியாய் இருந்து தண்டனை வழங்கும் நமது மனசாட்சியே இந்த சனியின் தர்மம்! ஆம். நமது மனசாட்சியின் வடிவில் நிழலாய் நம்மை தொடர்வது சனியே!
அவரே நிஜத்துக்கும் நிழலுக்கும் இடைப்பட்டவர்! ஏனெனில் அவர் சூரியனுக்கும் நிழல்ஷரூபமான சாயா தேவிக்கும் பிறந்தவர்.
குற்றங்கள் செய்யும் எவருக்குமே நிம்மதியான ஆழ்ந்த உறக்கம் என்ற பூலோக சொர்க்கம் கிட்டுவதே இல்லை! ஏனெனில் சனியே நிம்மதியான உறக்கத்துக்கும் இரவுக்கும் உரியவர்.
நாம் செய்த பிழைகள் எல்லாம் நமது உடல் சக்தி முடங்கும்போது நம்மை சுற்றிநின்று நம் உயிருக்கும் உபத்திரவம் செய்யும்! வயோதிக காலத்தில் துணைவர்களே துரோகிகளானால்..! ஏனெனில் சனியே வயோதிக காலத்துக்கு அதிபதி! மகிழ்ச்சியான மனம், நிம்மதியான உறக்கம், துன்பமில்லாத வாழ்வு, பாதுகாப்பான இறுதிக்காலம் என்ற விஷயங்களே இந்த கலியுக வாழ்வின் குறிகோள் என்று ஆகின்றபோது, அவைகளை குறிவைப்பதே ‘சனி தர்மம்’ என்று ஆகிறது.! இவைகள் எல்லாம் சனியால் பாதிக்கப்பட வேண்டுமா? பாக்கியமாக்கப்படவேண்டுமா? என்பதெல்லாம் நம் செயல்களிலேதான் உள்ளது.
ஏனெனில் ஒன்பதாமிடம் தந்தை ஸ்தானம் மட்டுமல்ல…பாக்கிய ஸ்தானம் என்றும் ஜோதிடத்தில் அழைக்கப்படுகிறது. ஆகவே, தந்தை மற்றும் நமது பாக்கியம் சிறக்க வேண்டுமெனில் சனியின் தாக்கம் அங்கிருப்பது சிறப்பல்ல!
முதன்முதலாக தந்தையான சூரியனுக்கு ‘சூரிய கிரகணத்தை’ தன் பார்வையால் கொடுத்தது சனி பகவான்தான்! ஏனெனில் ‘சனி வழி தனி வழி’ அதுவே சனி தர்மத்தின் சிறப்பு! அது ஏனெப்படி தனிப்பட்டதாய் விளங்குகிறது என்பதை சனியின் பிறப்பு வரலாறு மூலம் அடுத்த இதழில் பார்ப்போம்!
கருத்து தெரிவிக்க