உள்நாட்டு செய்திகள்

‘அரசியல் தீர்வு கிடைத்தால் நாட்டில் சமாதானம் மலரும்’

அரசியல் தீர்வை காணும் வகையில் புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பணி துரிதப்படுத்தப்படவேண்டும் என இந்து சமய விவகார அமைச்சின் கண்காணிப்பு நாடளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார்.

அரசியல் தீர்வை வலியுறுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனால் நேற்று (25.07.2019) சமர்ப்பிக்கப்பட்ட சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தின் போது அவர் இவ்வாறு கூறினார்.

“தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படும் என்ற உறுதிமொழியின் பிரகாரம் பூர்வாங்க செயற்பாடுகள் வெற்றிகரமாக ஆரம்பமாகின. காலப்போக்கில் அந்த பயணம் மந்தகதியை அடைந்து தற்போது முற்றாக முடங்கும் கட்டத்தில் உள்ளது.

எனவே, முன்னுரிமை வழங்கப்பட்டு தீர்க்கப்படவேண்டிய இந்தப்பிரச்சினை ஓரங்கட்டிவிட்டு பிரதான அரசியல் கட்சிகள் ஏனைய பிரச்சினைகளின் பின்னால் ஓடித்திரிகின்றன.

அரசியல் தீர்வு திட்ட விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகவும் பொறுமையாகவும், விட்டுக்கொடுப்புடனும் செயற்பட்டுவருகின்றது.

இவ்வாறு தமிழர் தரப்பால் பல விட்டுக்கொடுப்புகள் செய்யப்பட்டுள்ளன. இனியும் விட்டுக்கொடுப்பு செய்வதாக இருந்தால் புதிய அரசியலமைப்பை உருவாக்கும் திட்டத்தைதான் கைவிடவேண்டும்.

அதேபோல் சம்பந்தன் ஐயாவை வெறுங்கையுடன் வடக்குக்கு அனுப்பவேண்டாம். அது நாட்டுக்கு நல்லதாக அமையாது.

பௌத்த மதத்துக்கான முன்னுரிமை நீக்கப்படவுள்ளது என சிங்கள, பௌத்த மக்கள் மத்தியில் போலி பரப்புரைகள் முன்னெடுக்கப்பட்டன. இவற்றை நாம் முறியடித்தோம்.

இந்த நாட்டிலே நிலையான சமாதானம் மலரவேண்டுமெனில் தேசிய இனப்பிரச்சினைக்கு கட்டாயம் அரசியல் தீர்வு காணப்படவேண்டும்.

அதற்காக புதிய அரசியமைப்பு உருவாக்கப்படவேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் எவர் ஜனாதிபதியானாலும் முன்நோக்கி பயணிக்கமுடியாத நிலையே ஏற்படும் என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.

தமிழர்களின் பொறுமைக்கும் ஒரு எல்லையிருக்கின்றது. அதை மீண்டும், மீண்டும் சோதனைக்குட்படுத்தி நாட்டில் வீண் பிரச்சினைகளை ஏற்படுத்த வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்கின்றேன்.” என்றார்.

கருத்து தெரிவிக்க