புலனாய்வு அதிகாரிகளிடம் காணொளிப் பதிவு கருவி மூலம், சாட்சியங்களை பதிவு செய்ய 21/4 தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்திவரும் விசேட நாடாளுமன்றத் தெரிவுக்குழு முடிவு செய்துள்ளது.
அரச புலனாய்வுச் சேவையின் தலைவர் நிலந்த ஜெயவர்த்தன எதிர்வரும் 24ஆம் திகதி, தெரிவுக்குழு முன்பாக, முன்னிலையாகும் போது, அவரிடம் காணொளிப் பதிவு கருவி மூலமே சாட்சியம் பெறப்படவுள்ளது.
அத்துடன் புலனாய்வு அதிகாரிகளிடம் சாட்சியங்களைப் பதிவு செய்யும் போது, ஊடகங்கள் அனுமதிக்கப்படமாட்டாது.
அத்துடன், புலனாய்வு அதிகாரிகளை ஒளிப்படம் எடுக்கவும் அனுமதி அளிக்கப்படாது என்றும் தெரிவுக் குழு உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
புலனாய்வு அதிகாரிகளிடம் பகிரங்க வாக்குமூலங்களைப் பெற்றுக் கொள்வது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று குற்றச்சாட்டுகள் கூறப்பட்ட நிலையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அரச புலனாய்வுச் சேவையின் தலைவர் நிலந்த ஜெயவர்த்தனவின் ஒளிப்படம் இதுவரை ஊடகங்களில் வெளியாகாத நிலையில், அவரை தொடர்ந்தும், இரகசியமாக வைத்திருக்கும் வகையில். சாட்சியமளிக்கும் போது, அவரைப் படம் பிடிப்பதற்குத் தடை விதிக்கவும் தெரிவுக்குழு தீர்மானித்துள்ளதாக தெரிய வருகிறது.
கருத்து தெரிவிக்க