விளையாட்டு செய்திகள்

தென்னாபிரிக்காவுடன் தோல்வி: கவலையில் அவுஸ்ரேலிய தலைவர்

தென்னாபிரிக்காவிடம் தோல்வி கண்டதன் மூலம் அவுஸ்ரேலிய அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருந்து 2-வது இடத்துக்கு சரிந்துள்ளது.

இந்த தோல்வி தொடர்பில் அவுஸ்ரேலிய அணியின் தலைவர் ஆரோன் பிஞ்ச் கவலை வெளியிட்டுள்ளார்.

‘இந்த ஆட்டத்தில் வெற்றி பெற விரும்பினோம். தோல்வி கண்டது ஏமாற்றம் அளிக்கிறது. இருப்பினும் இந்த போட்டியில் இருந்து சில நம்பிக்கைகளை பெற்றுள்ளோம்.

எங்களது விக்கெட்டுகள் வேகமாக சரிந்தாலும் டேவிட் வார்னர் அருமையாக ஆடி சதம் அடித்தார். அலெக்ஸ் கெரி சிறப்பாக செயல்பட்டு அணியை வெற்றிக்கு அருகில் அழைத்து சென்றார்.

எங்களது பந்து வீச்சு நேர்த்தியாக அமையவில்லை. நாங்கள் எங்களது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இந்த போட்டியில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.
உஸ்மான் கவாஜா, மார்கஸ் ஸ்டோனிஸ் ஆகியோர் காயம் குறித்து மருத்துவ பரிசோதனைக்கு பிறகு  முடிவு செய்யப்படும். இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டம் மிகப்பெரியதாக இருக்கும்.

இது சிறந்த ஆட்டமாக அமையும் என்று நம்புகிறேன். அதிக ரசிகர்கள் முன்னிலையில் ஆடுவதை ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறோம்’ என்று ஆரோன் பிஞ்ச் தெரிவித்துள்ளார்.

மென்செஸ்டரில் நேற்று முன்தினம் பகல்-இரவாக இடம்பெற்ற 45-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் அவுஸ்ரேலிய அணி, அரையிறுதி வாய்ப்பை இழந்த தென் ஆப்பிரிக்காவை எதிர்கொண்டது. இந்த போட்டியில் அவுஸ்ரேலிய தோல்வி கண்டது.

இதேவேளை உலக கிண்ண தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் இலங்கையை வீழ்த்திய இந்திய அணி முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. இங்கிலாந்து அணி 3-வது இடமும், நியூசிலாந்து அணி 4-வது இடமும் பிடித்தன.

முதல் 4 இடங்களை பிடித்த இந்த அணிகள் அரையிறுதியில் மோதவுள்ளன. எஞ்சிய 6 அணிகள் லீக் சுற்றுடன் போட்டியில் இருந்து வெளியேறியுள்ளன.

கருத்து தெரிவிக்க