விளையாட்டு செய்திகள்

ஏமாற்றத்துடன் விடைபெறும் பாகிஸ்தான் வீரர் சொய்ப் மாலிக்

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் சொய்ப் மாலிக் அறிவித்துள்ளார்.

உலக கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் இடம் பிடித்து இருந்த சொய்ப் மாலிக் 3 ஆட்டங்களில் ஆடி 8 ஓட்டங்கள் மட்டுமே பெற்றிருந்தார்.

இதனால் இந்தியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்திற்கு பிறகு அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. பங்களாதேஷுக்குஎதிரான கடைசி லீக் ஆட்டத்தில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

பங்களாதேஷுக்கு எதிரான ஆட்டம் முடிந்ததும் மைதானத்தில் பாகிஸ்தான் அணி வீரர்கள் அனைவரும் வரிசையாக நின்று சொயிப் மாலிக்குக்கு மரியாதையுடன் விடைகொடுத்தனர்.

போட்டி முடிந்த பின்னர் சொயிப் மாலிக் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘உலக கோப்பையுடன் ஓய்வு பெறுவேன் என்று எனது முந்தைய பேட்டிகளில் தெரிவித்து இருந்தேன்.

ஒருநாள் போட்டியில் இருந்து இன்று (நேற்று) ஓய்வு பெறுகிறேன். ஓய்வு பெறுவது குறித்து சில ஆண்டுகளாகவே யோசித்து வந்தேன். ஒருநாள் போட்டியில் இருந்து விடைபெறுவது எனக்கு வருத்தம் அளிக்கிறது.

ஏனெனில் ஒருநாள் போட்டியில் விளையாடுவதை நான் அதிகம் நேசித்தேன். ஓய்வால் கிடைக்கும் நேரத்தை எனது குடும்பத்தினருடன் செலவிடுவேன். அத்துடன் 20 ஓவர் போட்டியில் அதிக கவனம் செலுத்த முடியும்.

கடந்த 20 ஆண்டுகளாக எனக்கு ஆதரவு அளித்த மக்களுக்கும், என்னுடன் ஆடிய வீரர்களுக்கும், பயிற்சியாளர்கள் உள்பட அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்து கொள்கிறேன். எனக்கு எந்த வருத்தமும் இல்லை.

அணிக்கு தேவையான வரிசையில் நான் பேட்டிங் செய்தேன். பல முறை நான் அணியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறேன்.

கடைசி தருணத்தில் அணிக்காக ரன் குவிக்க முடியாமல் போனது வேதனை அளிக்கிறது. ஒன்றிரண்டு ஆட்டங்களில் மோசமாக ஆடியதை வைத்து ஒருவரின் ஆட்ட திறனை முடிவு செய்வது ஏமாற்றம் அளிக்கிறது’ என்று தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க