பருத்தித்துறை பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 8 வயது மாணவியை பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் சார்பில் முன்வைக்கப்பட்ட பிணை விண்ணப்பத்தை பருத்தித்துறை நீதிவான் நீதிமன்று நிராகரித்தது.
காவல்துறையினரின் புலன் விசாரணைகள் நிறைவடையாத நிலையில் சந்தேகநபரை பிணையில் விடுவிக்க முடியாது என்று சுட்டிக்காட்டிய பருத்தித்துறை நீதிமன்ற நீதிவான் நளினி சுதாகரன், சந்தேகநபரை வரும் 17ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
பருத்தித்துறை பருத்தித்துறை பாடசாலை ஒன்றில் தரம் 3இல் கல்வி பயிலும் 8 வயது மாணவியை பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆசிரியர் உட்படுத்தினார் என்று நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
சம்பவம் மே மாதம் 27ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.
மாணவியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் ஆசிரியர் கைது செய்யப்பட்டு பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தினர்.
அவர் நேற்று புதன்கிழமை வரை தொடர்ச்சியாக இரண்டு தடவைகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
சந்தேகநபர் சார்பில் முன்னிலையான மூத்த சட்டத்தரணி, பிணை கோரி மன்றில் விண்ணப்பம் செய்தார்.
“வழக்கில் சட்ட மருத்துவ அதிகாரியால் வழங்கப்பட்ட மருத்துவ சோதனையில் சிறுமியை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தியமைக்கான ஏதுக்கள் இல்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதனால் சந்தேகநபருக்கு பிணை வழங்கவேண்டும்” என்று மூத்த சட்டத்தரணி சமர்ப்பணம் செய்தார்.
எனினும் சந்தேகநபருக்கு பிணை வழங்க காவல்துறையினர் கடும் ஆட்சேபனை தெரிவித்தனர்.
இருதரப்பு விண்ணப்பங்களையும் ஆராய்ந்த நீதிவான் நளினி சுதாகரன், காவல்துறையின் புலன்விசாரணைகள் நிறைவடையும் வரை சந்தேகநபரைப் பிணையில் விடுவிக்க முடியாது என்று அவர் சார்பில் முன்வைக்கப்பட்ட பிணை விண்ணப்பத்தை நிராகரித்தார். அத்துடன், சந்தேகநபரை வரும் 17ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
இதேவேளை, இந்தச் சம்பவத்தையடுத்து பருத்தித்துறை புனித தோமையார் றோமன் கத்தோலிக்க பெண்கள் பாடசாலையின் அதிபரையும் குற்றஞ்சாட்டப்பட்ட ஆசிரியரையும் உடனடியாக பதவியிலிருந்து இடைநிறுத்துமாறு வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், மாகாண கல்வியமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க