மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் முன்னாள் நம்பர் ஒன் வீரரான ரோஜர் பெடரர் 4-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் முன்னாள் நம்பர் ஒன் வீரரான ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), கடந்த ஆண்டு (2018) சாம்பியனான ஜான் இஸ்னரை (அமெரிக்கா) எதிர்கொண்டார். 63 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் பெடரர் 6-1, 6-4 என்ற நேர்செட்டில் ஜான் இஸ்னரை தோற்கடித்து 4-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
37 வயதான பெடரர் கைப்பற்றிய 54-வது பெரிய பட்டம் இதுவாகும். இந்த வெற்றியின் மூலம் ரோஜர் பெடரர் உலக தரவரிசையில் 5-வது இடத்தில் இருந்து 4-வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறார். தோல்வி அடைந்த ஜான் இஸ்னர் 9-வது இடத்தில் இருந்து 10-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். சாம்பியன் பட்டத்தை வென்ற பெரடருக்கு ரூ.9¼ கோடி பரிசுத்தொகையும், 1,000 தரவரிசை புள்ளியும் கிடைத்தது.
கருத்து தெரிவிக்க