விளையாட்டு செய்திகள்

தொடர்ச்சியான தோல்விகளில் இருந்து மீள்வது யார்? ராஜஸ்தான் – பெங்களூரு அணிகள் இன்று மோதல்

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு ஜெய்ப்பூர் சவாய் மான் சிங் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

இந்த சீசனில் இதுவரை வெற்றியை ருசிக்காத அணிகள் இவை இரண்டு மட்டுமே. அஜிங்க்ய ரஹானே தலைமை யிலான ராஜஸ்தான் அணி, மோதிய 3 ஆட்டங்களிலும் ஆதிக்க நிலையில் இருந்த போதிலும் நெருக்கமாக சென்று கடைசி கட்டங்களில் தோல்வியை சந்தித்தன. கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் பந்து வீச்சின் போது இறுதிக்கட்ட ஓவர்களில் அதிக ரன்களை வாரி கொடுத்தது.

மேலும் பேட்டிங்கின் போது ரஹானே, பட்லர் அபராமான அடித்தளம் அமைத்துக் கொடுத்த போதிலும் நடுகளவரிசை அதை சரியாக பயன்படுத்திக்கொள்ளத் தவறியது. எல்லாவற்றுக்கும் மேலாக அந்த ஆட்டத்தில் அஸ்வின் செய்த மன்கட் ரன் அவுட்டும் ராஜஸ்தான் அணிக்கு பாதகமாக அமைந்தது.

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடி சதம் விளாசினார். அந்த ஆட்டத்தில் 198 ரன்கள் குவித்த போதிலும் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்திக்க நேரிட்டது. இதைத் தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது ராஜஸ்தான் அணி.

இந்த ஆட்டத்தில் தொடக்க ஓவர்களில் பந்து வீச்சில் ராஜஸ்தான் அணி ஆதிக்கம் செலுத்தியது. சென்னை அணியின் 3 முக்கிய விக்கெட்களை 27 ரன்களுக்குள் சாய்த்த போதிலும் தோனி 46 பந்துகளில் 75 ரன்கள் விளாசி ஆட்டத்தை ராஜஸ்தான் அணியிடம் இருந்து பறித்தார்.

சென்னை அணிக்கு எதிரான ஆட்டம் முடிந்ததும் ரஹானே கூறுகையில், “ஒருஅணியாக நாங்கள் வெற்றியையும் பெறுகிறோம், தோல்வியையும் பெறுகி றோம். டி 20 ஆட்டங்களில் சின்ன சின்னச் தருணங்களை வெல்ல வேண்டுமானால் நாங்கள் சிறப்பாக செயல்பட வேண்டும். கடந்த 3 ஆட்டங்களிலும் நாங்கள் சிறப்பாக செயல் பட்டோம். கொஞ்சம் அதிர்ஷ்டம் கைகொடுக்கும் பட்சத்தில் நிலைமை மாறும் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.

பேட்டிங்கில் சஞ்சு சாம்சன், ஜாஸ் பட்லர், ரஹானே, ராகுல் திரிபாதி ஆகியோர் சிறந்த பங்களிப்பு செய்து வரும் நிலையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்டீவ் ஸ்மித், பென் ஸ்டோக்ஸ் ஆகியோரிடம் இருந்து பெரிய அளவிலான இன்னிங்ஸ் வெளிப்படவில்லை. இதனால் இவர்கள் இருவரும் உயர்மட்ட செயல்திறனை வெளிப்படுத்த வேண்டிய கட்டத்தில் உள்ளனர். இதேபோல் பந்து வீச்சிலும் ஒருங்கிணைந்த செயல்படு அவசியமாக உள்ளது.

விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும் வெற்றிக்காக ஏங்கும் நிலையிலேயே உள்ளது. இதுவரை 3 ஆட்டங்களில் விளையாடி உள்ள அந்த அணி இரு ஆட்டங்களில் மோசமான தோல்வியை சந்தித்தது. சென்னை அணிக்கு எதிராக முதல் ஆட்டத்தில் 70 ரன்களில் சுருண்டு தொடரை மோசமாக தொடங்கிய பெங்களூரு அணி தனது அடுத்த ஆட்டத்தில் மும்பைஅணியிடம் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

இந்த ஆட்டத்தில் மலிங்கா வீசிய கடைசி பந்து நோபாலாக இருந்த போதிலும் களநடுவர் கவனிக்காமல் விட்டதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த அதிர்ச்சியில் இருந்து மீளாமல் இருந்த பெங்களூரு அணி நேற்று முன்தினம் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 118 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. 232 ரன்கள் இலக்கை துரத்திய பெங்களூரு அணி 113 ரன்களுக்கு சுருண்டிருந்தது.

இந்த ஆட்டம் முடிவடைந்ததும் விராட் கோலி கூறுகையில், “தங்கள் முன்பு உள்ளசவாலை வீரர்கள் சிறப்பாக எதிர்கொள்ள வேண்டும். இன்னும் 11 ஆட்டங்கள் உள்ளது.

ஜெய்ப்பூர் ஆடுகளம் சிறப்பானதாகவே இருக்கும். மும்பை அணிக்கு எதிராக விளையாடியது போன்ற உயர்மட்ட அளவிலான ஆட்டத்தை நாங்கள் வெளிப்படுத்த வேண்டும்” என்றார்.

விராட் கோலி, டி வில்லியர்ஸ் ஆகியோரை மட்டுமே பேட்டிங்கில் நம்பியிருப்பது பெங்களூரு அணிக்கு பெரிய பலவீனமாக உள்ளது. அதிலும் இவர்கள் இருவரும் மும்பை அணிக்கு எதிராக மட்டுமே மட்டையை சுழற்றினார்கள். அதிலும் வெற்றிக்கு அருகே மட்டுமேஅணியை கொண்டு செல்ல முடிந்தது. பார்த்தீவ் படேல், மொயின்அலி, ஹெட்மையர் ஆகியோர் பொறுப்புடன் விளை யாடும் பட்சத்தில் அணி யின் பேட்டிங் வலுப்பெறும்.

அணிகள் விவரம்ராஜஸ்தான் ராயல்ஸ்: அஜிங்க்ய ரஹானே (கேப்டன்), ஸ்டீவ் ஸ்மித், பென் ஸ்டோக்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர், ஜாஸ் பட்லர், ஆஷ்டன் டர்னர், இஷ் சோதி, ஓஷன் தாமஸ், லயிம் லிவிங்ஸ்டோன், சஞ்சு சாம்சன், சுபம் ரஞ்ஜனே, ஸ்டூவர்ட் பின்னி, ஸ்ரேயஸ் கோபால், சுதேஷன் மிதுன், ஜெயதேவ் உனத்கட், பிரசாந்த் சோப்ரா, மகிபால் லாம்ரோர், ஆர்யமான் பிர்லா, ரியான் பராக், தவால் குல்கர்னி, கிருஷ்ணப்பா கதவும், வருண் ஆரோன், சஷாங் சிங், மனன் வோரா, ராகுல் திரிபாதி.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: விராட் கோலி (கேப்டன்), டி வில்லியர்ஸ், பார்தீவ் படேல், மார்கஸ் ஸ்டாயினிஸ், ஷிம்ரன் ஹெட்மையர், ஷிவம் துபே, நேதன் கவுல்டர் நைல், வாஷிங்டன் சுந்தர், உமேஷ் யாதவ், யுவேந்திர சாஹல், மொகமது சிராஜ், ஹென்ரிச் கிளாசென், மொயின் அலி, காலின் டி கிராண்ட்ஹோம், பவன் நெகி, டிம் சவுதி, அக் ஷ்தீப் நாத், மிலிந்த் குமார், தேவ்தத் படிக்கல், குர்கீரத் சிங், பிரயாஸ் ரே பர்மான், குல்வந்த் கேஜ்ரோலியா, நவ்தீப் ஷைனி, ஹிமாத் சிங்.

நேரம்: இரவு 8

இடம்: ஜெய்ப்பூர்

நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

கருத்து தெரிவிக்க