வெளிநாட்டு செய்திகள்

நேபாளத்தை தாக்கிய கடும் புயலில் சிக்கி குறைந்தது 30 பேர் உயிரிழப்பு

நேபாளத்தின் தெற்கு பிராந்தியத்தில் கடுமையான புயல் தாக்கியதில் குறைந்தது 30 பேர் உயிரிழந்ததுடன், நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

நேபாளத்தின் பாரா, பர்சா ஆகிய மாவட்டங்களில் கடுமையாக வீசிய புயலால் அங்குள்ள வீடுகள் கடுமையான பாதிப்புக்குள்ளானதுடன், வாகனங்கள் தூக்கி வீசப்பட்டு, மரங்கள் வேரோடு சாய்ந்ததால் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புயல் வீசத் தொடங்கியபோது அங்கிருந்து நகர்ந்து பாதுகாப்பான இடத்திற்கு சென்றால், தன்னுடைய உயிரை காப்பற்றிக்கொள்ள முடிந்ததாக 70 வயதாகும் குசும் காலு கூறுகிறார்.

“நான் வீட்டிலிருந்து வெளியேறுவதற்காக கதவை திறந்த அடுத்த நொடியே வீட்டின் மேற்கூரை சரிந்துவிட்டது” என்று பாரா மாவட்டத்தில் வசிக்கும் அவர் பிபிசியிடம் கூறினார்.

தங்களுடைய கிராமத்திலுள்ள அனைத்து வீடுகளுமே இந்த புயலில் சிக்கி சேதமடைந்துள்ளதாக பல்பாரியம் என்ற கிராமத்தை சேர்ந்த திரௌபடி தேவி கூறுகிறார்.

“அந்த சமயத்தில் எங்களது வீட்டில் ஐந்து பேர் இருந்தோம். அப்போது, வீட்டின் சுவர் எங்கள் மீது இடிந்து விழுந்துவிட்டது. கடும் போராட்டத்திற்கு பின்னர் கட்டட இடிபாடுகளிலிருந்து எப்படியோ மீண்டு வந்துவிட்டோம்” என்று அவர் கூறுகிறார்.

புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்பு பணிகளில் ஈடுபடுவதற்காக நேபாளத்தின் சிறப்பு படைகள் சம்பவ இடங்களை நோக்கி விரைந்துள்ளன.

வசந்த காலத்தின்போது நேபாளத்தில் இடியுடன் கூடிய மழை பொழிவது இயல்பானதுதான் என்றாலும், வெகு அரிதாகவே உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு இதுபோன்ற புயல்கள் உருவாகும் என்று பிபிசி நேபாளி சேவையின் செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கருத்து தெரிவிக்க