தயாசிறி ஜயசேகர, துமிந்த திஸாநாயக்க ஆகிய சுதந்திரக்கட்சி உறுப்பினர்களை அமைதி காக்குமாறும் அவ்வாறு இல்லாவிட்டால் பதிலடி படு பயங்கரமாக இருக்கும் என்றும் கூட்டு எதிரணி எச்சரிக்கை விடுத்துள்ளது என நம்பகரமான அரசியல் வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.
கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியானால் மலரும் 30 பேர்கொண்ட அமைச்சரவையில் ராஜபக்சக்களுக்கு 8 அமைச்சுப் பதவிகளை வழங்கவேண்டிவரும் என்றும், எனவே, மைத்திரிபால சிறிசேனவே ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்குவார் என்றும் தயாசிறி ஜயசேகர அண்மையில் அறிவித்திருந்தார்.
அத்துடன், சுதந்திரக்கட்சியின் தேசிய அமைப்பாளரான துமிந்த திஸாநாயக்கவும், தேசிய தொலைக்காட்சியொன்றில் அண்மையில் ஒளிபரப்பட்ட நேர்காணலில் ராஜபக்சக்களை விமர்சிக்கும் வகையில் கருத்து வெளியிட்டிருந்தார்.
இதனால் மஹிந்தவின் சகாக்கள் கடும் சீற்றத்தில் இருக்கின்றனர். மஹிந்த தலைமையில் நடைபெற்ற கூட்டத்தின்போது உள்ளக்குமுறல்களை வெளிப்படுத்தியுள்ளதாகவும் தெரியவருகின்றது.
“தயாசிறி ஜயசேகர, துமிந்த திஸாநாயக்க ஆகியோர் பதவிநிலை மறந்து கருத்துகளை வெளியிடுகின்றனர். எனவே, நாமும் பதிலடி கொடுத்தால் ஓடி ஒளியவேண்டிய நிலை அவர்களுக்கு ஏற்படும்.’’ என்று பிரசன்ன ரணதுங்கவும், நிமல் லான்சாவும் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளனர்.
அத்துடன், சுதந்திரக்கட்சியுடனான புதிய அரசியல் கூட்டணி தொடர்பான பேச்சுகளை முறித்துக்கொள்ளுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, இரு தரப்புகளுக்குமிடையில் தற்போது கடும் சொற்போர் மூண்டுள்ளது.
இதன்காரணமாகவே நடைபெறவிருந்த 6ஆம் சுற்று பேச்சுவார்த்தை இம்மாதம் 26 ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆனால், அது நடைபெறுமா என்பது கேள்விக்குறியே.
கருத்து தெரிவிக்க