இலங்கையில் இந்து மகா சபையொன்று உருவாக்கப்படும் என்றும், அதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன என்றும் ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், இந்து சமய விவகார அமைச்சின் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார்.
இந்து சமய விவகார அமைச்சின் கண்காணிப்பு எம்.பியாக நேற்று முன்தினம் (21) வேலுகுமார் எம்.பி. பதவியேற்றார். அமைச்சர் மனோ கணேசன் தலைமையில் இந்து விவகார அமைச்சில் இதற்கான நிகழ்வு நடைபெற்றது.
இந்நிலையில் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பில் விபரிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் மேலும் கூறியதாவது,
“ அன்பு, ஐக்கியம், அஹிம்சை மற்றும் தர்மங்களையே இந்து சமயம் போதிக்கின்றது. எனவே, புனிதமான அந்த சமயத்தை பாதுகாக்கவேண்டியதும், அதன் தொன்மையை எடுத்துரைக்க வேண்டியதும் எமது பிரதான பணியாகும்.
கடந்த காலங்களில் இந்து மதத்துக்கு எதிராக இனவாதிகள் அரசியல் போர் தொடுத்தனர். திட்டமிட்ட அடிப்படையில் புனித பூமிகள் ஆக்கிரமிக்கப்பட்டன. தொல்லியல் ஆய்வு என்ற போர்வையிலும் இந்து அடையாளங்கள் சிதைக்கப்பட்டன.
பதவிகளில் இருந்தவர்களும் இவற்றையெல்லாம் கண்டும் காணாதவர்கள்போலவே செயற்பட்டனர். ஆனால், இந்து சமய விவகார அமைச்சை தலைவர் மனோ கணேசன் பொறுப்பேற்ற பின்னர் அதிரடி மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன.
மூடிமறைக்கப்பட்ட உண்மைகள் வெளிச்சத்துக்குவருவதுடன், இந்து சமயத்தை உரிய வகையில் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
முன்பு நிர்வாக மற்றும் சட்டக்கட்டமைப்பு இருக்கவில்லை. இவற்றை நாம் நிறுவியுள்ளோம்.
விரைவில் தேசிய மட்டத்திலான இந்து மகா சபையொன்று நிறுவப்படும். இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை தலைவர் மனோ கணேசன் சமர்ப்பித்துள்ளார். ஆரம்பக்கட்ட பணிகள் பூர்த்தியாகியுள்ள நிலையில், விரைவில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் இடம்பெறும்.
இலங்கையில் பௌத்த மதத்துக்கென மகாநாயக்க தேரர்களும், பௌத்த பீடங்களும் உள்ளன. இஸ்லாமியர்களுக்கு உலமா சபை இருக்கின்றது. அதேபோல் கிறிஸ்தவர்களுக்கு திருச்சபைகள் உள்ளன. ஆனால், இந்து மதத்துக்கென சட்டரீதியிலான கட்டமைப்பொன்று இல்லை. அதை உருவாக்குவதே எமது நோக்கமாகும்.” என்றார் வேலுகுமார் எம்.பி.
கருத்து தெரிவிக்க