இந்தியா

மருத்துவர் சான்றிதழ் தர மறுப்பு; பரிசோதனை முடிவு தாமதம்; 2 நாட்கள் வீட்டில் கிடந்த கொரோனா சடலம்!

கொல்கத்தாவைச் சேர்ந்தவர் 71 வயது முதியவர். கொரோனா பரிசோதனைக்கான ரத்த மாதிரி எடுக்கப்பட்ட சில மணி நேரங்களில் கடந்த திங்கள் கிழமை இறந்து விட்டார். இதனால், இவரது குடும்பத்தினருக்கும் இவரது உடலை என்ன செய்வது என்று தெரியவில்லை.

பரிசோதனை முடிவு வராததால், இறப்பு சான்றிதழ் வழங்க மருத்துவர்கள் மறுத்து விட்டனர். இறப்பு சான்றிதழ் இல்லாமல் அவரது உடலை எரிக்கவோ, அடக்கம் செய்யவோ முடியவில்லை. இதனால், இறந்த முதியவரின் உடலை என்ன செய்வதென்று தெரியாமல் குடும்பத்தினர் குழம்பினர்.
சுகாதாரத்துறை, மாநகராட்சி, போலீஸ், அரசியல்வாதிகள் என்று அனைவருக்கும் தகவல் கொடுத்து உதவி கேட்டனர். ஆனால், யாரும் உதவிக்கு வரவில்லை.
இதையடுத்து, செவ்வாய் கிழமை ஐஸ் பெட்டி ஒன்று வாங்கி வந்து அதில் அந்த முதியவரின் சடலத்தை வைத்து மூடினர். அன்று மாலை கிடைத்த கொரோனா பரிசோதனையில் அவருக்கு கொரோனா பாசிடிவ் என்ற ரிசல்ட் கிடைத்தது. இதையடுத்து வந்த மாநராட்சி ஊழியர்கள் முதியவரின் உடலை எடுத்துச் சென்றனர். அதாவது முதியவர் இறந்து 48 மணி நேரம் கடந்து சடலத்தை எடுத்து சென்றனர். பரிசோதனை முடிவு வருவதற்கு தாமதம் ஆனதால், ஏறக்குறைய 50 மணி நேரம் முதியவரின் குடும்பத்தினரும், அடுக்குமாடி குடியிருப்பினரும் அந்த சடலத்துடன் வசித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திங்கள் கிழமை முதியவர் உடல்நலம் குன்றியுள்ளார். மருத்துவமனைக்கு சென்று வீடு திரும்பியுள்ளார். திரும்பிய சில மணி நேரங்களில் இறந்துள்ளார். இதற்குப் பின்னர் பாதுகாப்புக் கவசம் அணிந்து வந்த மருத்துவர் ஒருவர் இவரை பார்த்துள்ளார். ஆனால், இறப்பு சான்றிதழ் கொடுக்க மறுத்து, போலீசை அணுகுமாறு கூறிச் சென்றுள்ளார்.

இதுகுறித்து குடும்பத்தினர் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்திருக்கும் பேட்டியில், ”முதியவர் இறந்தவுடன் போலீஸ் உதவி எண், அரசியல்வாதிகள், சுகாதாரத்துறை என்று அனைவரையும் உதவிக்கு அழைத்தோம். ஆனால், யாருமே உதவவில்லை. ஆதலால், ஐஸ் பெட்டி வாங்கி வந்து அதில் சடலத்தை வைத்து விட்டோம்.
பரிசோதனை முடிவு வந்த பின்னரும் சுகாதாரத்துறைக்கு தகவல் கொடுத்தோம். ஆனால், பதில் இல்லை. அவர்களே புதன் கிழமை காலை எங்களை அணுகினர். அதன்பின்னரே, புதன் கிழமை மதியம் மாநகராட்சி ஊழியர்களை அனுப்பி வைத்தனர்” என்று தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் முதியவர் குடியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருத்து தெரிவிக்க