இந்தியா

அரசுப் பள்ளிகளில் படிப்பவர்களுக்கு மட்டுமே இனி அரசாங்க வேலை.. ஜார்க்கண்ட் அரசு திட்டம்

அரசு பள்ளிகளில் படிப்பவர்களுக்கு மட்டுமே அரசாங்க வேலை என்ற திட்டத்தை செயல்படுத்த ஜார்க்கண்ட் மாநில அரசு பரிசீலனை செய்து வருகிறது. மக்களிடம் கருத்து கேட்ட பிறகு இத்திட்டம் சட்டமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில அமைச்சர் ஜகர்நாத் மதோ தெரிவித்தார்.

தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுவதுமே அரசு வேலை பெறுவது தான் பெரும்பாலானவர்களின் முக்கியமான விருப்பம். சுயதொழில், பெரு நிறுவனங்களில் வேலை செய்வதை விட அரசு வேலைகளில் இருப்பதையே பலரும் விரும்புகிறார்கள்.

ஆயிரம் பதவிகளுக்கு பல லட்சம் பேர் போட்டி என்று நாளிதழ்களில் செய்திகள் அடிக்கடி வருவதும் உண்டு. தூய்மை பணியாளர் வேலைக்கு எம்பிஏ படித்தவர்கள் விண்ணப்பித்ததாகக் கூட செய்திகள் பார்த்திருப்போம்.ஏனெனில் அரசு வேலை தான் பாதுகாப்பானது, வயதான பின்னரும் வாழ்வழிக்கும் ஒரு அங்கம் என்பதை மக்கள் ஆழமாக நம்புகிறார்கள்.

இந்நிலையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் அரசுப் பள்ளிகளில் படிப்பவர்களுக்கு மட்டுமே அரசாங்க வேலை கொடுக்க வேண்டும் என்ற திட்டம் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தும் முன் மக்களிடம் கருத்துக்கள் கேட்கப்படும் என்றும் மக்களின் கருத்துக்களின் அடிப்படையில் இது சட்டமாக்கப்படும் என்றும் அம்மாநில பள்ளிக்கல்வி மற்றும் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை அமைச்சர் ஜகர்நாத் மதோ தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் மேலும் கூறுகையில். அரசுப் பள்ளிகளில் படிப்பவர்களுக்கு மட்டுமே அரசாங்க வேலை கொடுக்க வேண்டும் என்பதே என்னுடைய தனிப்பட்ட நிலைப்பாடு.. தனியார் பள்ளிகளில் படித்துவிட்டு அரசுப் பணிக்கு வர ஆசைப்படுவது நியாயம் இல்லை. அரசாங்க வேலை வேண்டுமென நினைப்பவர்கள் அரசுப் பள்ளியில்தான் படிக்க வேண்டும். ஜார்க்கண்ட் மாநிலத்தில் இந்த சட்டத்தை கொண்டுவருதற்கு முன் பொதுமக்களின் கருத்துக் கேட்கப்படும். அவர்களின் ஒப்புதல் பெற்ற பிறகே இந்தத் திட்டத்தைச் சட்டமாக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஒவ்வொரு மாணவருக்கும் ஜார்க்கண்ட் மாநில அரசு தலா ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரம் வரை மாதந்தோறும் செலவழித்து வருகிறது. ஆனாலும் மக்கள் தனியார் பள்ளிகளில் படிக்கவே விரும்புகிறார்கள். இந்நிலையை மாற்றி அதிக எண்ணிக்கையிலான பெற்றோர், தங்களுடைய குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்கும் வகையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் அரசுப் பள்ளிகளை தரம் உயர்த்துவோம்’ இவ்வாறு அமைச்சர் ஜகர்நாத் மதோ கூறினார்.

ஆசிரியர்களுக்கு கற்பிப்பதை தவிர வேறு பணிகளில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என்று கூறிய அமைச்சர் ஜகர்நாத் மதோ, அப்படி செய்தால்தான் ஆசிரியர்கள் மாணவர்கள் மீது முழு கவனம் செலுத்தி கற்பிக்க இயலும். மாணவர்களின் கல்வித்திறன் மேம்படும் என்பதும் தன்னுடைய கருத்து என்று தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க