கொல்கத்தா: ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கு தொடரும் என்று மேற்கு வங்க மாநில அரசு இன்று அறிவித்துள்ளது.
கொரோனா பரவலைத் தொடர்ந்து மார்ச் மாதம் 24 ஆம் தேதி முதல், நாடு முழுக்க பல்வேறு கட்டங்களாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. தற்போது நாட்டில் ஐந்தாவது கட்ட ஊரடங்கு உள்ளது.
ஜூன் மாதம் 30ஆம் தேதியுடன் இந்த ஊரடங்கு காலகட்டம் நிறைவடையும். இதற்குப் பிறகு மத்திய அரசு எந்த மாதிரியான ஊரடங்கு கொண்டுவரும், அல்லது ஊரடங்கு இருக்காதா என்பது பற்றியெல்லாம் விவாதங்கள் வருகின்றன.
ஆனால், மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி அரசு தங்கள் மாநிலத்தில் ஜூலை 31-ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும் என்று, இன்று அறிவித்துள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில், சில சலுகைகளும் வழங்கப்படும். அதேநேரம் ஊரடங்கு இல்லாமல் கொரோனாவை கட்டுபடுத்த முடியாது என்பதில் தெளிவாக இருப்பதை இந்த உத்தரவு காட்டுகிறது.
மத்திய சுகாதார அமைச்சகத்தின்படி, மேற்கு வங்கத்தில் மொத்தம் 14,728 உறுதிப்படுத்தப்பட்ட கோவிட் -19 கேஸ்கள் உள்ளன, அவற்றில் 580 பேர் உயிரிழந்தனர் என்கிறது புள்ளிவிவரம்.
தமிழகத்தில், ஏற்கனவே கொடுக்கப்பட்டு வந்த, பல்வேறு சலுகைகள் நாளை முதல் ரத்து செய்யப்படுகின்றன. அதில் முக்கியமானது மண்டலங்களுக்கு இடையேயான பொது போக்குவரத்து ரத்து ஆகிறது.
ஜூன் 30ம் தேதி வரை இந்த மாதிரியான கெடுபிடிகள் அமலில் இருக்கும். அதன் பிறகு எந்த மாதிரி நடவடிக்கை எடுக்கப்படும் என்பது மருத்துவ வல்லுனர்கள் குழு உடன் முதல்வர் ஆலோசனை நடத்தி முடிவு செய்வார் என்று தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கருத்து தெரிவிக்க