மட்டக்களப்பு மாவட்டத்தின் ஒரு சில உள்ளூராட்சி மன்றங்களினால் ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் செயற்பாடுகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்கள் பலர் அண்மைக் காலமாக தமது ஊடகப்பணியினை முன்னெடுத்துச்செல்வதில் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளதாகவும் கவலை வெளியிடப்பட்டுள்ளது.
அத்துடன், பொது மக்கள் தகவல்களை அறிந்து கொள்ளும் உரிமையும் மறுதலிக்கப்பட்டு வருகின்றமையை அவதானிக்க முடிவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாழைச்சேனை – கோறளைப்பற்று பிரதேச சபையின் தவிசாளரினால் பிரதேச ஊடகவியலாளரான கைலாயப்பிள்ளை உருத்திரன் கடந்த வாரத்தில் அச்சுறுத்தப்படுள்ளார். ஓட்டமாவடி -கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையினால் மாதாந்த சபை அமர்வுகளில் சுயாதீனமாக ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிப்புப் பணியினை மேற்கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற செயற்பாடுகள் ஊடகவியலாளர்களை கட்டுப்படுத்தும் வகையிலேயே இடம்பெறுகின்றது எனவும் கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
கருத்து தெரிவிக்க