முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் பௌத்த விகாரை அமைக்கப்பட்டுள்ளமை தொடர்பாக கலந்துரையாடல் ஒன்று நடைபெற்று வருகிறது.
மாவட்ட செயலகத்தில் விசேட கலந்துரையாடல் அமைச்சர் மனோ கணேசன் பங்குபற்றுதலுடன் இந்தக்கலந்துரையாடல் இடம்பெறுகிறது.
2010 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் இராணுவ முகாம் ஒன்று குறித்த ஆலயப் பகுதி அபகரிக்கப்பட்டு அமைக்கப்பட்டது
அந்த இடத்திலேயே வருகை தந்து குடியேறிய கொலம்ப மேதாலங்க தேரர் என்பவரால் அந்த இடத்திலே இராணுவ ஆதரவுடன் விகாரை ஒன்றை அமைத்ததுடன் அண்மையில் குறித்த விகாரையில் சர்ச்சைக்குரிய பாரிய புத்தர் சிலை ஒன்றையும் வைத்துள்ளார்.
இதனையடுத்து ஆலய வளாகத்தில் பூசை வழிபாடுகளுக்கு சென்ற பக்தர்களுக்கும் குறித்த குழுவுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையைத் தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் முல்லைத்தீவு பொலிஸாரால் வழக்கு தொடரப்பட்டது.
இந்தநிலையில் இரண்டு பகுதியினரும் குறித்த பிரதேசத்தில் ஆலய வழிபாடுகளை தங்குதடையின்றி செய்வதற்கும் நீராவியடிப் பிள்ளையார் ஆலய நிர்வாகத்தினர் ஆலய வழிபாட்டு செயற்பாடுகளுக்கு குறித்த பௌத்த மதகுரு இடையூறு வழங்கக் கூடாது எனவும் நிபந்தனை விதித்து இவற்றை மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது
எனினும் குறித்த பௌத்த விகாரை பௌத்தர்களுக்கு சொந்தமான விகாரை என்று கூறி, அண்மையில் புல்மோட்டை வெலிஓயா மற்றும் கொக்குளாய் பகுதியைச் சேர்ந்த சிங்கள மக்களும்; குறிப்பிட்ட பிக்குமார் சிலரும் இணைந்து குறித்த இடத்தில் ஒரு கவன ஈர்ப்பு போராட்டத்தை நடத்தினர்.
இந்த சர்ச்சையை தொடர்பிலேயே தற்போது கலந்துரையாடல் இடம்பெறுகிறது.
இந்த கலந்துரையாடலில் அமைச்சர் மனோ கணேசன் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன் சாள்ஸ் நிர்மலநாதன் சிவசக்தி ஆனந்தன் பிரதேச சபை தவிசாளர்கள் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் ஆலய நிர்வாகத்தினர், விகாரையின் விகாராதிபதி மற்றும் பலரும் கலந்துகொண்டு குறித்த விடயங்கள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடி வருகின்றனர்
கருத்து தெரிவிக்க