இந்தியா

8 மணி நேர சண்டை.. சீனாவின் “Death Squad” தாக்குதல்..

லடாக்: நேற்று முதல் நாள் இரவு மற்றும் நேற்று அதிகாலை லடாக்கில் இருக்கும் கல்வான் பகுதியில் சீன ராணுவம் எப்படி அத்துமீறி கொலைவெறி தாக்குதல் நடத்தியது என்று விவரங்கள் வெளியாகி உள்ளது. ராணுவ வட்டாரங்கள் தேசிய ஆங்கில ஊடகங்களுக்கு இது தொடர்பாக பிரத்யேக விவரங்களை தெரிவித்து உள்ளனர்.

லடாக் எல்லையில் இந்தியாவின் கட்டுப்பாட்டில் வரும் கல்வான் பகுதியில் நேற்றும் நேற்று முதல் நாளும் இந்தியா – சீனா இடையே கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது. இரண்டு நாட்டு ராணுவம் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது.
கல்வான் பகுதியில் நடந்த சண்டையில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதனால் எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது. சீன தரப்பில் 43 பேர் பலியானதாக தகவல் வருகிறது.

இந்த சண்டை கல்வான் நதி இருக்கும் பகுதியில் மொத்தம் 8 மணி நேரம் நடந்து இருக்கிறது. ஆம் நேற்று முதல் நாள் இரவு தொடங்கி நேற்று அதிகாலை வரை மொத்தம் 8 மணி நேரம் இந்த சண்டை நடந்து உள்ளது. People’s Liberation Army எனப்படும் சீனாவின் பிஎல்ஏ ராணுவப்படை தனது Death Squad எனப்படும் தாக்குதல் படை பிரிவை அனுப்பி இந்த தாக்குதலை நிகழ்த்தி இருக்கிறது. இதனால் சீனா திட்டமிட்டு இந்த தாக்குதலை நடத்தி இருக்கலாம் என்று கூறுகிறார்கள்.

இந்த தாக்குதலை நிகழ்த்துவதற்காக சீனா தயாராக வந்து இருக்கிறது. இரும்பு கம்பிகள், கம்பிகளின் முனையில் சுற்றப்பட்ட இரும்பு முற்கள், மூட்டை மூட்டையாக கற்கள் என்று தயாராக சீனாவின் தாக்குதல் படை வந்துள்ளது. இந்த தாக்குதலில் சம்பவ இடத்தில் 3 இந்திய ராணுவ வீரர்கள் பலியானார்கள். மீதம் 17 ராணுவ வீரர்கள் படுகாயம் அடைந்து, குளிரில் கஷ்டப்பட்டதில் பலியாகி உள்ளனர். இன்னும் 4 பேர் உயிருக்கு போராடி வருகிறார்கள். 100+ வீரர்கள் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்தியா அமைதி பேச்சுவார்த்தை நடத்த சென்ற காரணத்தால், இந்திய வீரர்களிடம் ஆயுதம் இல்லை. இப்படி ஆயுதம் இல்லாத வீரர்களை கூட சீனாவின் படை தாக்கி இருக்கிறது. நதியில் இறங்கி சென்ற வீரர்களை கூட சீன ராணுவம் தாக்கியதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கிறது. முழுக்க முழுக்க விதிகளை மீறி சீனா ராணுவம் இப்படி செயல்பட்டு இருக்கிறது. சீனாவின் தாக்குதலில் தப்பித்த இந்திய வீரர்கள் இந்த விவரங்களை வெளியிட்டு வருகிறார்கள்.

கடந்த இரண்டு வாரம் முன் இந்தியா – சீனா இடையிலான ராணுவ ரீதியான பேச்சுவார்த்தைக்கு பின் கல்வான் பகுதியில் இருக்கும் கட்டுப்பாட்டு பகுதி 14ல் இருந்து சீன ராணுவம் வெளியேறியது. இது இந்தியாவிற்கு கீழ் வரும் இடம் ஆகும். இங்கிருந்து சீனா வெளியேறிய நிலையில், அதே கட்டுப்பாட்டு பகுதியில் கல்வான் நதியின் வாய் பகுதியில் புதிய டென்ட் அமைத்து சீனா அத்துமீறியது.

இதை தட்டிக்கேட்டு, அங்கிருந்து சீன வீரர்களை வெளியே அனுப்ப வேண்டிதான் நேற்று இந்திய ராணுவ படை வீரர்கள் அங்கே அனுப்பப்பட்டனர். இதுதான் அவர்களின் டாஸ்க். பீகார் பிரிவுக்கு கீழ் வரும் ராணுவ அதிகாரி சந்தோஷ் பாபு மற்றும் அவரின் படைகள் அங்கே பேச்சுவார்த்தை நடத்த சென்று இருக்கிறார்கள். ஆனால் ஏதோ ஒரு காரணத்திற்காக சீனாவின் படை வீரர்கள் அங்கிருந்து வெளியேற மறுத்துள்ளனர். இதனால் அங்கே கை கலப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த பேச்சுவார்த்தையின் போதுதான் எல்லையில் தாக்குதல் நடந்து சண்டை நடந்துள்ளது. சீனாதான் இங்கு முழுக்க முழுக்க எல்லை மீறி படைகளை குவித்து இருக்கிறது. அங்கு சீனாவின் வீரர்கள் 500 பேருக்கும் அதிகமாக இருந்துள்ளனர். இதை தட்டி கேட்டு, அது சண்டையாக மாறி உள்ளது. இந்திய வீரர்கள் பேச்சுவார்த்தை தானே என்று ஆயுதங்கள் இல்லாமல் சென்றுள்ளனர். ஆனால் சீனா துப்பாக்கி இல்லாமலும் கூட கைகளை வைத்து தாக்கும் நவீன ஆயுதங்களை வைத்து தாக்கி இருக்கிறார்கள்.

சீனா தரப்பில் இந்த தாக்குதலில் 43 பேர் பலியானதாக கூறப்பட்டுகிறது. உண்மையில் சீனாவின் தரப்பில் எத்தனை பேர் பலியானார்கள் என்பது தொடர்பான விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. சீனா இது தொடர்பாக இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை. எங்கள் பக்கம் இத்தனை பேர் காயம் அடைந்துள்ளனர். இத்தனை பேரை இழந்து இருக்கிறோம் என்று சீனா எந்த விதமான கருத்தும் தெரிவிக்கவில்லை.

அதேபோல் சீனா ஏன் கடந்த வார பேச்சுவார்த்தையின் ஒப்பந்தத்தை மீறியது. சீனா ஏன் கல்வான் பகுதியில் இருந்து பின்வாங்கவில்லை. ஏன் புதிய டென்ட்களை அமைத்தது என்று இன்னும் விளக்கம் அளிக்கவில்லை. சீனாவின் இந்த திடீர் அத்துமீறலுக்கு காரணம் தெரியவில்லை. இந்திய ராணுவம் இனி இந்த லடாக் பிரச்னையை எப்படி எதிர்கொள்ளும், என்ன மாதிரியான மாற்றங்கள் ஏற்படும் என்று கேள்விகள் எழுந்துள்ளது.

கருத்து தெரிவிக்க