உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

விசேட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் செயற்பாடுகளை நாடாளுமன்றமே தீர்மானிக்கும்

விசேட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதா அல்லது இல்லையா என்பது குறித்து அதி உயர் சபையான நாடாளுமன்றமே தீர்மானிக்கவேண்டும். என சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை தான் ஏற்கப்போவதில்லை என்றும், புலனாய்வு அதிகாரிகளை விசாரணைக்கு அனுமதிக்கப்போவதில்லை என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று அறிவித்திருந்தார்.

அத்துடன், தன்னால் அனுப்பட்ட கடிதம் குறித்து சபாநாயகர் சபைக்கு தெரியப்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்தார்.

இந்நிலையில் சபாநாயகர் அலுவலகமும் இன்று மாலை விசேட அறிக்கையொன்றை விடுத்து, இது சம்பந்தமாக விளக்கமளித்துள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “சபையில் ஏற்படுத்தப்பட்ட பொது இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கப்பட்டது. ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளை சேர்ந்த 12 உறுப்பினர்கள் குழு அங்கத்தவர்களாக பிரேரிக்கப்பட்டிருந்தனர்.

எனினும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர்கள் பங்கேற்க மறுத்தனர். அவர்கள் தெரிவுக்குழுவில் பங்கேற்றிருந்தால், பிரச்சினைகள் ஏதேனும் இருப்பின் தெரிவுக்குழுவுக்குள்ளேயே கலந்துரையாடி அவற்றை நிவர்த்திசெய்திருக்கலாம்.

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள புதிய நிலையியற்கட்டளை சட்டத்தின் பிரகாரம், தெரிவுக்குழு அமர்வுக்கு ஊடகங்களை அனுமதிப்பதற்கு, இடமளிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் சட்டமா அதிபர் மற்றும் அந்நாட்டின் உளவுத்துறை அமைப்பான சி.ஐ.ஏ.யின் பிரதானி ஆகியோர்கூட அந்நாட்டின் சபையால் நியமிக்கப்பட்ட தெரிவுக்குழுவுக்கு அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவில் மட்டுமல்ல ஜனநாயகம் நிலவும் நாடுகளில் இப்படியான உயரிய ஜனநாயக அம்சங்கள் நடைமுறையில் உள்ளன.

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விடயங்களை பகிரங்கமாக குறிப்பிடவேண்டாம் என சாட்சியமளிக்க வருபவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டமா அதிபரால் ஜனாதிபதி செயலாளருக்கு அனுப்பட்ட கடிதத்தின் பிரதி சபாநாயகருக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. தெரிவுக்குழு விசாரணையின்மூலம் வெளியாகும் தகவல்களானவை தற்போதைய விசாரணையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என அதில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இதனையடுத்து இது குறித்து தெரிவுக்குழு உறுப்பினர்களுக்கு சபாநாயகர் தெரியப்படுத்தினார். தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் பணிகள் முன்னெடுக்கப்படவேண்டும் என உறுப்பினர்களை அழைத்து சபாநாயகர் ஆலோசனை வழங்கினார்.

மேற்படி, கடிதத்தை சபாநாயகர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை என்று ஜனாதிபதி கருத்து வெளியிட்டுள்ளார். ஜனாதிபதியால் அனுப்படும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களின் அடிப்படையிலேயே அதை சபையில் சமர்ப்பிப்பதா இல்லையா என முடிவெடுக்கப்படும்.

தெரிவுக்குழுகு குறித்தே ஜனாதிபதி கடிதம் அனுப்பியிருந்தார். அதை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கான தேவை எழவில்லை.” என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க