ரத்தன தேரரின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியுமென்றால், ஏன் எமது பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை என முல்லைத்தீவு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
நாட்டுக்காக ஒன்றிணைவோம் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால முல்லைத்தீவிற்கு விஜயம் மேற்கொண்ட நிலையில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், அங்கு நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போதே இவ்வாறு தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.
தமது நிலைப்பாடு தொடர்பாக அவர்கள் மேலும் தெரிவிக்கையில், இந்த நாட்டில் ஒரு ரத்தன தேரர் இறந்துவிடுவார் என்பதற்காகவும், குழப்பம் ஏற்பட்டுவிடும் என்பதற்காகவும் முஸ்லீம் தலைமைகளை பதவி நீக்கி பிரச்சினையைத் தீர்க்க முடியுமானால் 10 ஆண்டுகளுக்கு மேலாக அழுது கொண்டு, எமது உறவினர்களை தொலைத்த எமக்கு இதற்கு ஏன் இன்னும் ஒரு தீர்வினை அரசு பெற்றுத்தரவில்லை?
இன்றுடன் 824ஆவது நாளாக நாம் போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம். ஜனாதிபதியவர்களை ஏற்கனவே பலதடவைகள் ஜனாதிபதியை நாம் சந்தித்தபோதும் எமக்கு சரியான பதில் வழங்கப்படவில்லை. இன்றைய தினம் ஜனாதிபதி முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வருகைதருகின்றபோது எங்களுடைய எதிர்ப்பை பதிவுசெய்வதற்காக இந்த கவனயீர்ப்பை இன்றைய நாள் முன்னெடுத்திருந்தோம்.
ஜனாதிபதியினுடைய அபிவிருத்தித் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தோ அல்லது அவருடைய வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்தோ இந்த கவனயீர்ப்பை முன்னெடுக்கவில்லை. எங்களுடைய பிரச்சினைக்குத் தீர்வு கோரியே இந்த கவனயீர்ப்பை செய்கின்றோம்.
எங்களுக்கு சரியானதொரு தீர்வு வேண்டும். எங்களுக்கு நிச்சயமாக எங்களுடைய காணாமல் ஆக்கப்பட்டவர்கள் வேண்டும். எங்களுக்கான சரியான தீர்வு தராத பட்சத்தில் இந்தப் போராட்டத்தினை மாற்றி ஒவ்வொருவராக எங்களுடைய உயிரை மாய்ப்பதற்கு தயாராக இருக்கின்றோம். இது இறுதி எச்சரிக்கையாக இருக்கட்டும் என குறிப்பிட்டுள்ளனர்.
கருத்து தெரிவிக்க