வடக்கு செய்திகள்

முல்லைத்தீவு மக்களுக்கு ஜனாதிபதியால் பல்வேறு திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டன

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 3 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டு வந்த ‘நாட்டுக்காக ஒன்றிணைவோம்’ வேலைத் திட்டத்தின் இறுதிநாள் நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாக கலந்து கொண்டு பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை ஆரம்பித்து வைத்திருக்கிறார்.

அந்த வகையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் புதிதாக சமூர்த்தி பயனாளிகளாக தெரிவு செய்யப்பட்ட 13592 பேருக்கு சமுர்த்தி கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டு ஆரம்ப கட்டமாக இன்று 3 670 பயனாளிகளுக்கு சமுர்த்தி கொடுப்பனவு கையளிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு முல்லைத்தீவில் உள்ள 1750 பேருக்கு காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டிருக்கின்றன. மேலும் நிகழ்வில் கலந்து கொண்டவர்களில் 6,000 பேருக்கு தென்னை மரக் கன்றுகளும் 4000 பேருக்கு மாமரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டிருக்கின்றன

சிறுநீரக நோயை கட்டுப்படுத்தும் நோக்கோடு மொத்தமாக 1340 தண்ணீர் சுத்திகரிப்பு உபகரணம், 8 குடிநீர் சுத்திகரிப்பு தொகுதிகளை அமைப்பதற்காக 11.34 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியமைக்கான அனுமதி கடிதங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

மேலும் புதுக்குடியிருப்பு வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருக்கின்ற இனிய வாழ்வு இல்லத்திற்காக 2.484 மில்லியன் ரூபாவும் மாற்று வலுவுடையோருக்கான மலசலகூடங்களை அமைப்பதற்காக 3.5 மில்லியன் ரூபாகளும் பொது இடங்களில் அணுகு வசதிகளை அமைப்பதற்காக 0.6 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டு அதற்கான அனுமதி கடிதங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

இது தவிரவும் பல்வேறுபட்ட திட்டங்கள் இன்று செயற்படுத்தப்பட்டிருந்தன.

இந்த நிகழ்வில் அமைச்சர்களான தயாகமகே, காமினி ஜயவிக்ரம பெரேரா, கயந்த கருணாதிலக்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ சுமந்திரன் சிவப்பிரகாசம் சிவமோகன், காதர் மஸ்தான் மற்றும் அரசியல் பிரமுகர்கள் வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் உள்ளிட்ட ஆளுநர்கள், அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

கருத்து தெரிவிக்க