மாதாந்திர பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் ஜூன் 14ம் தேதி திறக்கப்படுகிறது. ஆனால், பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை தந்திரி மற்றும் திருவாங்கூர் தேவஸ்தானம் போர்டு உடனான ஆலோசனைக்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கேரள தேவசம் அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும், 19 ஆம் தேதி துவங்கி 28ம் தேதிவரை சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறவிருந்த ஆராட்டு விழாவும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜூன் 14ம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, ஜூன் 19ஆம் தேதி இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்பட உள்ளது.
இந்த காலகட்டத்தில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. ஆனால் நித்திய கால பூஜைகள் ஐயப்பனுக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக, சபரிமலையில் மேற்கண்ட முடிவுகளை அரசு எடுத்துள்ளது. முதல் முறையாக நோய் தொற்று பரவல் காரணமாக, பக்தர்களுக்கு சபரிமலையில் தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.முன்னதாக தினசரி காலை 4 மணி முதல் மதியம் 1 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கவும், ஒரு மணி நேரத்திற்கு தலா 200 பேர் வீதம் தினமும் 16 மணி நேரத்தில் 3,200 பேர் மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப்படவும் அரசு திட்டமிட்டிருந்தது.
ஆனால், தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் இன்று தேவசம்போர்டு தலைவர் வாசு, தந்திரி மகேஸ் மோகனரு ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, கோவில் நடைதிறப்பு, பூஜைகள் மற்றும் திருவிழாக்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. பக்தர்களை இப்போது தரிசனத்திற்கு அனுமதிக்க கூடாது என தந்திரி கருத்து தெரிவித்துள்ளார். அவரது வலியுறுத்தலுக்கு அரசு சம்மதம் தெரிவித்து, பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.
கருத்து தெரிவிக்க