உலகம்

அமெரிக்காவில் 12 நாட்களைக் கடந்தும் தொடர்கின்ற போராட்டம் !

அமெரிக்காவில் ஜோர்ஜ் பிளாய்ட் இன் கொலை தொடர்பாக 12 நாட்களைக் கடந்தும் அமைதி வழி போராட்டங்கள் நடைபெற்ற வண்ணம் உள்ளன.

கடந்த 25 ஆம் திகதி மினியாபொலிஸ் நகரில் பொலிசாரால் கறுப்பின இளைஞர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் அந்நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது‌

வளர்ச்சி அடைந்த நாடான அமெரிக்காவில் இப்போதும் இப்படிப்பட்ட இனவெறி நிலவுகிறதா என உலகின் மற்றைய நாட்டு மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதற்கிடையில், ஆர்ப்பாட்டக்காரர்களை நாய்கள், திருடர்கள் என கடுமையாக விமர்சித்த அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் பேச்சுகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதோடு மட்டுமல்லாது , அதற்கு நீதி கேட்டும் விடிய விடிய வன்முறை போராட்டங்கள் நடந்து வருகிறது.

போராட்டங்களை கட்டுப்படுத்த அரசாங்கம் எவ்வளவோ முயன்றும், போராட்டக்காரர்கள் ஓய்ந்தபாடில்லை. அமெரிக்காவில் மட்டுமல்ல , ஐரோப்பிய நகரங்கள், ஆஸ்திரேலிய தலைநகர் கான்பெரா போன்ற இடங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் நேற்று ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டம் நடத்தியதாக கூறப்படுகின்றது. காவல்துறை அதிகாரிகள் கட்டுப்பாடுகளை தளர்த்தி உள்ளதால் , வோஷிங்டனில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்ட வீதிகளில் மக்கள் பெருமளவில் கூடினர்.

போராட்டம் தொடங்கி 12 நாட்கள் கடந்த நிலையில், வன்முறை சற்று தளர்ந்து அமைதி வழி போராட்டங்கள் அதிகரித்துள்ளதாக தெரிகிறது. இவ்வாறு அமைதிப் போராட்டங்கள் நடத்துவதால் தங்கள் கோரிக்கை நிறைவேறும் என்று நம்புவதாக போராட்டத்தின் ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கருத்து தெரிவிக்க