யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் தமிழர்களை கண்டு நாங்கள் பயந்து கொண்டிருந்தோம்.அதற்கு காரணம் தமிழர்கள் பயங்கரவாதிகள் என்ற சந்தேகம் எமக்குள் இருந்தது.
ஆனால் யுத்தம் நடைபெற்று முடிந்த பின்பு நாங்கள் எல்லோரும் ஒற்றுமையாக வாழுகின்றோம்.
எனவே இன்று நாட்டில் நடைபெற்ற ஒரு துர்ப்பாக்கியமான சம்பவம் காரணமாக முஸ்லிம்கள் அனைவரையும் இனவாதிகளாகவோ பயங்கரவாதிகளாகவோ பார்க்க முடியாது.என நுவரெலியா மாவட்ட செயலாளர் எம் பீ.ஆர். புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.
நுவரெலியா அல் கபீர் ஜீம்மா மஸ்ஜித் பள்ளிவாசலில் தேசிய ஒற்றுமைக்கான ஒன்று கூடல் நிகழ்வு ஒன்று இடம்பெற்றது.
இதில் நுவரெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நுவரெலியா மாநகர சபை உறுப்பினர்கள் வர்த்தகர்கள் உட்பட பொது மக்களும் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து அங்கு கருத்து தெரிவித்த மாவட்ட செயலாளர் எம் பீ.ஆர். புஸ்பகுமார
நான் கடந்த ஒன்பது வருடங்களுக்கு மேலாக வடகிழக்கு பகுதியில் சேவை செய்தவன் என்ற அடிப்படையில் நாங்கள் அங்குள்ள மக்களுடன் நெருங்கிய தொடர்பை வைத்திருந்தோம்.
அவர்களுடைய கலை கலாசாரம் என்பவற்றை நன்கு அறிவோம்.எந்தவிதமான வேறுபாடுகளும் இருக்கவில்லை.
ஆனால் அண்மையில் ஏற்பட்ட இந்த கசப்பான சம்பவம் காரணமாக இன்று முஸ்லிம் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியிருக்கின்றார்கள்.
ஒரு சிறு குழுவினர் செய்த விடயம் காரணமாக எத்தனைவகையான பிரச்சினைகளை சந்திக்க வேண்டியுள்ளது.
அந்த சம்பவத்தை தடுத்து நிறுத்த முடியாத காரணத்தால் எங்களுக்குள் இருந்த அந்த நல்லுறவு சிறிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.
நாம் என்றுமே எதிர்பார்க்க முடியாத ஒன்று.
அதே நேரத்தில் இன்று முஸ்லிம் மக்களை பார்க்கின்ற பொழுது ஒரு சந்தேகம் ஏற்படுகின்றது.இவர்களும் அந்த தடை செய்யப்பட்ட அமைப்பை சேர்ந்தவர்களாக இருப்பார்களோ என்ற சந்தேகம் ஏற்படுகின்றது.
இன்று அதிகமான பிரச்சினைகளுக்கு காரணம் வதந்திகள்.இதனை நிறுத்த வேண்டும்.
எனவே நாங்கள் அனைவரும் இணைந்து மீண்டும் எமக்கு மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த விசுவாசத்தை கட்டியெழுப்புவதற்கு பள்ளிவாசல்களிலும் முஸ்லிம்களும் இணைந்து செயற்பட வேண்டிய தேவை இருக்கின்றது.
அதற்கு காரணம் அந்த தடை செய்யப்பட்ட குழுவினர் உங்கள் மூலமாகவே வருகை தருகின்றார்கள்.
எனவே நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.அனைத்து வீடுகளையும் சென்று தேடுதல் நடத்துவது என்பது முடியாத ஒரு காரியமாகும்.
எந்த காரணம் கொண்டும் அந்த அமைப்புகள் வளர்ச்சி அடைவதற்கு உதவி செய்ய முன்வராதீர்கள்.
இதனை நீங்கள் உணர்ந்து செயற்பட வேண்டும்.இன்னும் அந்த தடை செய்யப்பட்ட அமைப்பை சேர்ந்தவர்கள் இருக்கலாம்.அவர்களை இனம் காண வேண்டும். எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க