உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

குருநாகலை வைத்தியருக்கு 40 கோடி சொத்து

சந்தேகத்திற்கிடமான முறையில் சொத்துகளை ஈட்டியமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள குருணாகலை போதனா வைத்தியசாலையின் வைத்தியரிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றனர். இதனடிப்படையில் அவர் 40 கோடி பெறுமதியான சொத்துகளுக்கு உரிமையாளரானது எப்படி என பல கோணங்களிலும் விசாரணைகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குருணாகலை வீரசிங்க மாவத்தையைச் சேர்ந்த வைத்தியர் சேகு சியாப்டீன் மொஹமட் ஷாஃபி (42), மகப்பேற்றுச் சத்திர சிகிச்சைகளின் போது முறையற்ற விதத்திலான செயற்பாடுகளை மேற்கொண்டார் என சிங்களப் பத்திரிகையொன்று அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தது. அதன்பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சந்தேக நபரான வைத்தியரை கைது செய்தனர்.

குறித்த வைத்தியர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சார்பில் ஐக்கிய தேசிய கட்சியில் கடந்த 2015 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்துள்ளார். இவர் மீண்டும் வைத்திய சேவையில் இணைந்துள்ளதுடன், வருமானத்துக்கு மேலதிகமாக சொத்துகளை ஈட்டியுள்ளமை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைய சம்பந்தப்பட்ட வைத்தியரைக் கைது செய்ததாக குருநாகல் மாவட்டத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் கித்சிறி வசந்த ஜயலத் தெரிவித்தார்.

குறித்த வைத்தியர் வசித்து வந்த அதிசொகுசான இரண்டுமாடி வீடு, குருநாகல் நகரில் 15 பேர்ச்சர்ஸ் காணியில் கட்டிடம், மேலும் 44 பேர்ச்சர்ஸ் காணியில் கட்டிடம், குருநாகல் மெலந்தவத்தை எனும் இடத்தில் சொகுசு மாடியுடன் காணியும் அவருக்குச் சொந்தமானதென ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இதேவேளை, வைத்தியர் சேகு சியாப்டீன் மொஹமட் ஷாஃபியினால் மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சைகள் மற்றும் கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகள் தொடர்பில் விசேட விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட வருவதாக குருநாகலை போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சரத் வீரபண்டார தெரிவித்தார்.

வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் சந்தன கெதன்கமுவ தலைமையில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பிந்திக் கிடைத்த செய்தி: குருநாகலையில் கைது செய்யப்பட்ட வைத்தியருக்கு எதிராக 16 முறைப்பாடுகள் இன்று  (27) வைத்தியசாலையில் பதிவானதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். குருநாகலை, வாரியபொல, கலேவெல, தம்புளை, மாவத்தகம, மெல்சிறிபுர ஆகிய பகுதிகளைச் சேர்ந்தோரே இவ்வாறு முறைப்பாடுகளைப் பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி: குருநாகல் வைத்தியர் தொடர்பான அறிக்கை இன்று சமர்ப்பிப்பு

கருத்து தெரிவிக்க