பிஎம் கேர்ஸ் நிதியில் இருக்கும் பணம், செலவிடப்பட்ட கணக்கு, பெறப்பட்ட பணம் உள்ளிட்ட விவரங்களை அறிந்துகொள்ள அதை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவர வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று மனுதாரரும் வழக்கறிஞருமான சுரேந்தர் சிங் ஹூடா கோரிக்கை விடுத்ததால், வரும் 10-ம் தேதி விசாரிக்கப்படுகிறது.
கரோனா நிவாரணத்திற்காக உருவாக்கப்பட்ட பிஎம் கேர்ஸ் என்ற பிரத்யேக நிவாரண நிதியம் ‘பப்ளிக் அதாரிட்டி’ அல்ல. எனவே ஆர்டிஐ சட்டத்தின் கீழ் வராது என்று கூறி ஆர்டிஐ விண்ணப்பதாரர் ஸ்ரீ ஹர்ஷா கந்துகுரி என்பவர் கேட்டிருந்த விவரங்களை அளிக்க பிரதமர் அலுவலகம் மறுத்துவிட்டது.
அதில், ‘பிஎம் கேர்ஸ் நிதியம் தகவலுரிமைச் சட்டம், 2005 பிரிவு 2 ஹெச்-ன் படி பொது அதிகாரத்தின் கீழ் வராது. இது தொடர்பான விவரங்களை pmcares.gov.in என்ற இணையதளத்தில் பார்த்துக் கொள்ளலாம்’ என்று தெரிவிக்கப்பட்டு விவரங்களை அளிக்க மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த சூழலில் மனுதாரரும் வழக்கறிஞருமான சுரேந்தர் சிங் ஹூடா டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
”கரோனா வைரஸுக்கு எதிரான போரில் மக்களுக்கு உதவுவதற்காக அனைவரும் நன்கொடை வழங்க வேண்டும் என்று கடந்த மார்ச் 28-ம் தேதி பிரதமர் மோடி கோரிக்கை விடுத்தார். அதன்படி பொதுத்துறை நிறுவனங்கள், மத்திய அமைச்சகங்கள், அரசுத் துறைகள் ஆகியவை கோடிக்கணக்கில் நன்கொடை அளித்தன. ஆயுதப்படையினர், அரசு அதிகாரிகள், நீதிமன்றப் பணியாளர்கள் ஆகியோரின் ஊதியமும் பெறப்பட்டுள்ளது. சமீபத்தில் கிடைத்த தகவலின்படி ரூ.10 ஆயிரம் கோடி நிதி திரட்டப்பட்டு பிரதமர் அலுவலகத்தின் மரியாதை நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
ஆனால், கடந்த மாதம் 31-ம் தேதி ஹர்ஷா குந்தகர்னி தாக்கல் செய்த ஆர்டிஐ மனுவில், பிஎம் கேர்ஸ் நிதி தொடர்பாக எந்தத் தகவலையும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அளிக்க முடியாது. அது அரசமைப்புக்குள் வராது எனத் தெரிவிக்கப்பட்டிருந்து.
இந்த சூழலில் இனிமேல் ஆர்டிஐ சட்டத்தின்கீழ் யார் தாக்கல் செய்தாலும் இதே நிலைதான் ஏற்படும். ஆதலால், பிஎம் கேர்ஸ் நிதியில் பெறப்படும் நிதி, அது செலவு செய்யப்பட்ட விதம், பயன்படுத்தப்பட்டது குறித்து அறிய அதை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும். மேலும் பிஎம் கேர்ஸ் பெற்ற நன்கொடை, பயன்படுத்திய விதம் ஆகியவற்றை இணையதளத்தில் வெளியிட வேண்டும்.
பிஎம் கேர்ஸ் நிதி பொது அமைப்பு இல்லாவிட்டால், பொதுத்துறை நிறுவனங்கள், உயர் மட்டத்தில் உள்ள அரசு அமைப்புகள், அதிகாரிகள் ஆகியவற்றை நிதி அளிக்கத் தூண்டிய அவசியம் ஏன் என்று ஆய்வு செய்ய வேண்டும். கரோணா வைரஸ் நாடுமுழுவதும் பரவிவரும் நிலையில் அதைச் சமாளிக்க நிதிதேவைப்படுகிறது”. இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க