ஆசிய தடகள போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதி ஊக்க மருந்து சோதனையில் சிக்கி உள்ளார்.
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி டோவாவில் கடந்த மாதம் நடைபெற்றது. இதில் பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியா சார்பில் பங்கேற்ற தமிழக வீராங்கனை கோமதி 2 நிமிடம் 2.70 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கம் வென்று அசத்தினார்.
பெங்களூருவில் வருமான வரித்துறையில் பணியாற்றி வரும் அவர் திருச்சி அருகில் உள்ள முடிகண்டம் கிராமத்தை சேர்ந்தவர் ஆவார்.
ஆசிய தடகளத்தின் போது கோமதியிடம் நடத்தப்பட்ட ஊக்க மருந்து சோதனை முடிவு இப்போது கசிந்து இருக்கிறது. அதில் அவர் ‘நான்ட்ரோலோன்’ என்ற தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து கோமதி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கோமதியின் ‘பி’ மாதிரி சோதனையிலும் ஊக்க மருந்து உபயோகப்படுத்தியது உறுதி செய்யப்பட்டால் அவர் வென்ற தங்கப்பதக்கம் பறிபோவதுடன், 4 ஆண்டுகள் வரை தடை விதிக்கப்படும்.
கருத்து தெரிவிக்க