உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்முக்கிய செய்திகள்

சஹ்ரான் குழுவால் நாடாளுமன்றமும் குறிவைக்கப்பட்டதா?

21/4 தாக்குதலையடுத்து  தடை செய்யப்பட்டுள்ள, தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்புடன் நெருங்கிய தொடர்புகளை வைத்திருந்த நாடாளுமன்ற உரை பெயர்ப்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரிடம் பலகோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

சபாநாயகர் கருஜயசூரியவின் ஆலோசனையின் பிரகாரம், நாடாளுமன்றத்தின் பாதுகாப்புக்கு பொறுப்பான பாதுகாப்பு பிரிவின், விசேட குழுவொன்றும் இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

அத்துடன், இவ்விவகாரம் தொடர்பில் சபாநாயகர் கருஜயசூரிய நாளைய தினம் சபைக்கு தெரியப்படுத்துவார் என தெரியவருகின்றது.

குருணாகல மருத்துவமனையில் பணியாற்றும் தேசிய தவ்ஹீத் ஜமாத் உறுப்பினர் ஒருவரைக் கைது செய்ததை அடுத்தே, நாடாளுமன்ற உரை பெயர்ப்பாளர் தொடர்பான தகவல்களும் அம்பலமாகியுள்ளன.

இதையடுத்து ராஜகிரியவில் உள்ள அவரது வதிவிடத்தில் வைத்து,   குருணாகல காவல்துறையினர் இவரை நேற்று கைது செய்தனர்.

சந்தேக நபருக்கு தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்புடன் உள்ள தொடர்புகள் குறித்து சபாநாயகருக்கு அறிவித்த பின்னர், காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.

சந்தேக நபர், 2006ஆம் ஆண்டு நாடாளுமன்ற பணியாளராக இணைந்து கொண்டார்.

தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தீவிர செயற்பாட்டு உறுப்பினரான, இவர், அதன் தலைவர் சஹ்ரானின் நெருங்கிய சகாக்களில் ஒருவர் என்றும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ஏப்ரல் 21ஆம் நாள் நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பின்னர் சந்தேக நபர் சில நாட்கள் மாத்திரமே பணிக்கு வந்துள்ளார். தேசிய தவ்ஹீத் ஜமாத் உறுப்பினர்கள் இரகசியமாக அக்குரணவில் கூட்டங்களை நடத்தி வந்துள்ளனர் என்றும் தெரிய வந்துள்ளது.

கருத்து தெரிவிக்க