இதழ்கள்உள்நாட்டு செய்திகள்

‘ மனோவின் கன்னத்தில் அறைந்த கேள்வி’

பிரதமர் பண்டாரநாயக்காவை படுகொலை செய்ததன் மூலம் இலங்கையில் பயங்கரவாதம்தனிநபர் பயங்கரவாதமாக தென்னிலங்கையிலேயே முதலில் ஆரம்பித்தது என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

அத்துடன், தேரர் ஒருவர் எழுப்பிய கேள்வி என் கன்னத்தில் அடித்தது போல் இருந்தது எனவும் கூறினார்.

ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் அமைச்சர் பாடலி சம்பிக்க ரணவக்கவின் முன்னெடுப்பில் பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் “தேசிய வழி” என்ற தொனிப்பொருளில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இன்று ஐஎஸ் என்ற சர்வதேச தொடர்புடன் இஸ்லாமிய பயங்கரவாதமாக சொல்லப்பட்டு வருகின்றது. ஆகவே இன்று பயங்கரவாதம் என்பதற்கு சிங்கள, தமிழ், இஸ்லாமிய அடைமொழிகள் இந்நாட்டில் இருக்கின்றன.

இவற்றுடன் கூடவே இந்நாட்டில் அரச பயங்கரவாதமும் இருக்கின்றது என்பதை எவரும் மறுக்க முடியாது. இந்நிலையில், “இவை இனி போதும்போதவே போதும்” என்று கூறி புதிய தேசிய ஐக்கிய வழியை தேடும் காலம் உதயமாகிவிட்டது என நான் நம்புகிறேன்.

இன்று எமது அமைச்சர் ஒருவர், இந்நாடு சிங்கள பெளத்த நாடு அல்ல என கூறியுள்ளதை அடிப்படையாக கொண்டு நாடு முழுக்க பெரும் வாத விவாதங்கள் ஏற்பட்டுள்ளன. இங்கே எனக்கு முன் உரையாடிய தேரர் அவர்களும் இதுபற்றி பேசினார். என்னை கேட்டால், சட்டப்படி இது பெளத்த நாடுதானே என்பேன்.

ஏனென்றால் அப்படித்தானே, இந்த நாட்டின் அரசியலமைப்பில் எழுதப்பட்டுள்ளது? நாம் அரைக்குறையாக முடித்து வைத்துள்ள, புதிய அரசியலமைப்பு வரைபிலும்கூட இதை நாம் பெரும் வாத விவாதத்திற்கு உள்ளாக்கவில்லை என்பதை இங்கே அமர்ந்திருக்கும் நண்பர் சுமந்திரன் அறிவார் என நான் நம்புகிறேன்.

நாம் அனைவரும் இந்நாடு இலங்கைதான். ஆகவே நாம் அனைவரும் இலங்கையர்தான். ஆனால், ஏன் நம்மில் ஒரு பிரிவினர் இலங்கையர் என்று கூறுவதைவிட, தம்மை சிங்கள பெளத்தர் என்று வரையறை படுத்தி அழைக்க விரும்புகின்றனர் என யோசிக்க வேண்டும்.

அவர்களுக்கு சிங்கள பெளத்தர் என்ற காரணத்தால் விசேட பிரச்சினைகள் உள்ளன. அவற்றினால், பல சந்தேகங்களும், பயங்களும், கேள்விகளும் இருக்கின்றன. அவற்றுக்கு விடை காணும் வரை,இந்த சிங்கள பெளத்த வரையறை இருக்கத்தான் செய்யும்.

அதேபோல் இங்கே பேசிய தேரர், நடந்து முடிந்து விட்ட பயங்கரவாத படுகொலைகள் தொடர்பில், ஜனாதிபதியும் கவலையை பகிர்ந்து கொள்கிறார். பிரதமரும் கவலையை பகிர்ந்து கொள்கிறார். அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் கவலையை பகிர்ந்து கொள்கின்றனர்.

அப்படியானால் நாம் என்ன செய்வது எனக்கேட்டார். அவரது கேள்வி என் கன்னத்தில் அடித்தது போல் எனக்கு இருந்தது. பாதுகாப்பு தொடர்பில் எனக்கு நேரடி பொறுப்பு இல்லாவிட்டாலும் கூட, நானும் ஒரு அமைச்சர் என்ற முறையில் கூட்டுப்பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் நாகரீக மனோதிடம் இருக்கின்றது.” என்றார் அமைச்சர் மனோ.

 

கருத்து தெரிவிக்க