உள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்

வடமேல் மாகாணத்தில் பொலிஸ் ஊரடங்கு – செய்தித்துளிகள்

வடமேல் மாகாணத்தில் பொலிஸ் ஊரடங்கு

வட மேல் மாகாணத்தில் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மறு அறிவித்தல் வரும் வரை இந்த ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் இருக்கும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

வட மேல் மாகாணத்தில் உள்ள புத்தளம், குருநாகல் ஆகிய மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் இடம்பெற்ற வன்முறைகளை அடுத்து ஏற்பட்டுள்ள பதற்ற நிலையை அடுத்தே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்

பதில் பொலிஸ்மா அதிபராக சீ.டி. விக்ரமரத்னவை நியமிப்பதற்கு, அரசியலமைப்புப் பேரவை இன்று அனுமதி வழங்கியது.

சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் அரசியலமைப்புப் பேரவை இன்று கூடியது. இதன்போது ஜனாதிபதியால் பரிந்துரைக்கப்பட்ட மேற்படி பதவிக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

புதனன்று வெசாக் வாரம் ஆரம்பம்

வெசாக் வாரம் எதிர்வரும் புதன்கிழமை ஆரம்பமாகிறது. வெசாக் வாரத்தில் பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், ஆசிரிய கலாசாலைகளில் கல்வி வெசாக் வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்த வேண்டுமென கல்வி அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளது.

பாடசாலை முகாமைத்துவ குழுவும் மற்றும் பிரிவெனா நிர்வாக சபையும் இணைந்து இதனை மேற்கொள்ள வேண்டியது அவசியமென அமைச்சின் சமய அபிவிருத்தி பணிப்பாளர் நிமல் தர்மசிறி தெரிவித்துள்ளார்.

வாக்குமூலம்பெற அனுமதி

தற்கொலைக் குண்டு தாக்குதலுடன் தொடர்புடைய கோடீஸ்வர வர்த்தகரான, மொஹமட் இன்சாக் அஹமட்டின் வெல்லப்பிட்டிய தொழிற்சாலையில் வைத்து கைதுசெய்யப்பட்ட, கருப்பையா ராஜேந்திரன் அப்துல்லாவிடம் வாக்குமூலம் பெறுவதற்கு, கொழும்பு மேலதிக நீதவான் ஆர். எம்.பி. நெலும்தெனிய இன்று (13) பயங்கரவாத விசாரணைப் பிரிவினருக்கு அனுமதியளித்துள்ளார்.

கருப்பையா கருப்பையா ராஜேந்திரன் அப்துல்லா இந்த வெடிப்புச் சம்பவத்தின் 10ஆவது சந்தேகநபரென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பெயரில் கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களிடம் 14, 15ஆம் திகதிகளில் வாக்குமூலங்களைப் பெற்றுக்கொள்வதற்கு அனுமதி வழங்குமாறு, சிறைச்சாலைகள் அதிகாரிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு

”அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக அத்துரலியே ரத்ன தேரர் கொண்டுவரவிருக்கும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிர்க்கட்சி என்ற அடிப்படையில் எம்முடைய முழுமையான ஆதரவை வழங்குவோம்.”  என்று நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

 

 

கருத்து தெரிவிக்க