நுகர்வோர் பொருட்களின் விலைகளை தன்னிச்சையாக உயர்த்தும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சரவை செய்தி தொடர்பாளர் மற்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர்பந்துல குணவர்தன நேற்று தெரிவித்தார்.
ஜனவரி 1, 2024 முதல் அமுல்படுத்தப்பட்ட வரி (VAT) அதிகரிப்புடன், பெரும்பாலான வர்த்தகர்கள் தன்னிச்சையாக பொருட்களின் விலைகளை உயர்த்தியுள்ளனர்.
சில நுகர்வோர் பொருட்களுக்கு மாத்திரமே புதிதாக 18 வீத VAT விதிக்கப்படும் எனவும், ஏற்கனவே 15 வீத VAT விதிக்கப்பட்டுள்ள ஏனையவை நுகர்வோர் பொருட்களுக்கு மூன்று வீத VATஅதிகரிப்பு மட்டுமே பொருந்தும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
பெரும்பாலான அத்தியாவசிய பொருட்களுக்கு VAT அறவிடப்படுவதில்லை என அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று தெரிவித்தார்.
அந்த வகையில் அரிசி, கோதுமை, கோதுமை மா, குழந்தைகளுக்கான பால் மா, மேற்கத்திய மருந்துகள், உள்ளூர் மருந்துகள், மரக்கறிகள், பழங்கள், தேயிலை மற்றும் இறப்பர் போன்ற நுகர்வோர் பொருட்களுக்கு VAT அறவிடப்படவில்லை என அமைச்சர் சுட்டிக்காட்டினார். பெரும்பாலான வர்த்தகர்கள் இதனை ஏமாற்றி பொருட்களின் விலையை அதிகரிப்பதாகவும் இவ்வாறன நடவடிக்கைகளுக்கு அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தை பின்பற்றினால் மட்டுமே பொருளாதார நெருக்கடியை குறைக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து தெரிவிக்க