ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவை இலங்கை பிரஜையாக ஏற்றுக் கொள்வதை தடுக்கும், உத்தரவைப் பிறப்பிக்கக் கோரி, மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று (04) நிராகரிக்கப்பட்டது.
காமினி வியாங்கொட, பேராசிரியர் சந்ரகுப்த தெனுவர ஆகியோர் தாக்கல் செய்திருந்த இந்த மனு மீது கடந்த இரண்டு நாட்கள் விசாரணைகள் நடைபெற்றன.
மேன் முறையீட்டு நீதிமன்றின் தலைமை நீதியரசர் யசந்த கோதாகொட தலைமையிலான, நீதியரசர்கள் அர்ஜுன் ஒபேசேகர, மகிந்த சமயவர்தன ஆகியோர் அடங்கிய நீதியரசர் குழாம் முன்னிலையில் குறித்த மனு இன்று மூன்றாவது நாளாகவும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இன்று காலை முதல் நடந்த விசாரணைகளை அடுத்து, பிற்பகல் 3.15 மணிக்கு முன்னதாக சமர்ப்பணங்களை செய்ய காலஅவகாசம் அளிக்கப்பட்டது.மாலை 6 மணிக்கு தீர்ப்பு அளிக்கப்படும் என்றும் அறிவிப்பு விடுக்கப்பட்டது.
இதன்படி 6.05 மணியளவில் தீர்ப்பை அறிவித்த நீதியரசர் யசந்த கோத்தாகொட தலைமையிலான குழாம், இந்த மனுவை தள்ளுபடி செய்வதாக ஏகமனதாக அறிவித்தது.
அதேவேளை, மேன் முறையீட்டு நீதிமன்ற வளாகத்தில் கூட்டு எதிரணி எம்.பிக்களும், ஆதரவாளர்களும் திரண்டிருந்தனர். இதனால் காலை முதல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
தீர்ப்பு வெளியான பின்னர் கருத்து வெளியிட்ட விமல்வீரன்ஸ, கோட்டாபய ராஜபக்சவுக்கு கிடைத்த முதல் வெற்றி இதுவாகும் என தெரிவித்தார்.
கோட்டாவுக்கு எதிரான மனு நிராகரிக்கப்பட்டுள்ளதால் திங்களன்று வேட்பாளராக கோட்டாபய தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்வார்.
எனினும், மேன்முறையீட்டு நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மனுதாரர் பின்னர் உயர்நீதிமன்றுக்குச் சென்று மேன்முறையீடு செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒருமித்த தீர்ப்பை வழங்கியுள்ளதால் அதனை உறுதிப்படுத்தும் வகையிலேயே உயர்நீதிமன்ற தீர்ப்பு வெளியாகலாம் என சட்டவல்லுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கருத்து தெரிவிக்க