சினிமா

பார்வை மாற்றுத்திறனாளிக்கு வாய்ப்பளித்த இசையமைத்துள்ளார் டி. இமான்

தல அஜித் மற்றும் நயன்தாராவின் நடிப்பில் கடந்த பொங்கலன்று வெளியான படம் விஸ்வாசம். இப்படத்தில் இடம் பெற்ற தந்தை – மகள் பாசத்தைக் கூறும் கண்ணான கண்ணே பாடலை திரையரங்கில் கண்ட ரசிகர்கள் பெரும்பாலானோர் கண்களில் கண்ணீர் எட்டிப்பார்த்தது.

இந்த பாடலை பார்வை மாற்றுத்திறனாளி இளைஞர் ஒருவர் பாடிய வீடியோ சமூக வலைதளங்களில் கடந்த நாட்களாக மிக வைரலானது. ரசிகர்கள் இந்த வீடியோவை பகிர்ந்த நிலையில், இவரின் முகவரி, தொடர்பு எண் பற்றி தெரிந்தால் தனக்கு தெரியப்படுத்துமாறு இசையமைப்பாளர் டி.இமான் ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து அந்த இளைஞரை தொடர்புக் கொண்டு பேசியதாகவும், விரைவில் அவரை ஒரு பாடலுக்கு பயன்படுத்திக்கொள்வதாகவும், திருமூர்த்திக்கு மகிழ்ச்சியான் நாட்கள் காத்திருப்பதாகவும் டி.இமான் தெரிவித்திருந்தார். இந்நிலையில், கிருஷ்ணகிரி அருகே நொச்சிப்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த திருமூர்த்தி என்ற பார்வை மாற்றுத்திறனாளி இளைஞருக்கு டி.இமான் வாய்ப்பளித்ததையொட்டி, இமானை கௌரவிக்கும் விதமாக வீட்டிற்கு ஒரு மரமாக சுமார் 1000 மரக்கன்றுகள் நட அப்பகுதி கிராம மக்கள் முடிவெடுத்துள்ளனர்.

இசையமைப்பாளர் டி.இமான் மற்றும் திருமூர்த்தியின் பேர் சொல்லும் விதமாக மரங்களை வளர்க்கும் பசுமை திட்டமாக இது இருக்கும் என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். திருமூர்த்தி திரைப்படத்தில் பாடிய பிறகு அந்த பாட்டை டிரெண்ட் செய்து அவருக்கு மேலும் வாய்ப்புகள் கிடைக்க வழிவகை செய்யுமாறு கேட்டுக் கொண்ட டி.இமானுக்காக இந்த கௌரவத்தை செய்வதாக அவர்கள் தெரிவித்தனர்.

கருத்து தெரிவிக்க